திண்டுக்கல்-பழனி இடையே 110 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை
திண்டுக்கல்-பழனி இடையே 110 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல்-பழனி இடையே 110 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது.
திண்டுக்கல்-பழனி
நாடு முழுவதும் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது. இதற்காக ரெயில் பாதைகளில் அதிவேகமாக ரெயிலை இயக்கி தண்டவாளத்தின் உறுதித்தன்மை சோதிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தென்னக ரெயில்வேயில் அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த குழுவினர் ஒவ்வொரு பகுதியாக சென்று ரெயிலை அதிவேகமாக இயக்கி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் திண்டுக்கல்-பழனி இடையே 75 கி.மீ. வேகத்தில் தற்போது ரெயில் இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் ரெயில் வேகத்தை அதிகரிப்பதற்கு சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று திண்டுக்கல்-பழனி இடையே ரெயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது. இதற்காக ரெயில்வே என்ஜினீயர்களை கொண்ட குழுவினர் திண்டுக்கல்லுக்கு வந்தனர்.
110 கி.மீ. வேகம்
பின்னர் நவீன கருவிகள் பொருத்தப்பட்ட பெட்டி உள்பட 3 பெட்டிகள் இணைக்கப்பட்ட ரெயில் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டது. அந்த ரெயில் அதிகபட்சமாக 110 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மேலும் ரெயில் செல்லும் போது தண்டவாளத்தில் ஏற்படும் அதிர்வுகள் அளவிடப்பட்டன. அதோடு பாலங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் தண்டவாளத்தின் உறுதித்தன்மை சோதிக்கப்பட்டது.
அவை அனைத்தும் நவீன கருவியில் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான அறிக்கை ரெயில்வே கோட்ட மூத்த அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அதில் தண்டவாளத்தின் உறுதித்தன்மை குறைவாக இருப்பது தெரியவந்தால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். தண்டவாளம் உறுதியாக இருந்தால் அந்த வழியாக இயக்கப்படும் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story