மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 30 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொண்டுவரப்பட்ட 30 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திண்டுக்கல்:
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக மதுக்கடைகள் பூட்டி கிடந்தன. இதனால் கர்நாடகா மாநிலத்தில் இருந்து ரெயிலில் மதுவை கடத்தி வந்தனர். எனவே, திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் மைசூர்-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரெயிலில் தினமும் ரெயில்வே போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டதோடு, பலரும் கைதாகி உள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மட்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளது. எனவே ரெயில்வே போலீசார் மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனையை தொடர்கின்றனர்.
அதன்படி நேற்று காலை 6 மணிக்கு திண்டுக்கல்லுக்கு வந்த மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் போலீசார் சோதனையிட்டனர். அப்போது எஸ்-1 பெட்டியில் ஆள் இல்லாத ஒரு இருக்கைக்கு கீழே 3 பைகள் கேட்பாரற்று இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பைகளை திறந்து பார்த்தனர். அவற்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. மொத்தம் 30 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. அதை கடத்தி வந்தவர் போலீசாரை கண்டதும் தப்பி இருக்கலாம் என்று தெரிகிறது.
இதையடுத்து புகையிலை பொருட்களை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மைசூர் ரெயிலில் மதுவை தொடர்ந்து புகையிலை பொருட்கள் சிக்கி இருப்பது போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Related Tags :
Next Story