தூத்துக்குடியில் மழைநீர் தேங்குவதை தடுக்க ரூ.950 கோடியில் திட்டங்கள் கண்காணிப்பு அலுவலர் பிரகாஷ் தகவல்


தூத்துக்குடியில் மழைநீர் தேங்குவதை தடுக்க  ரூ.950 கோடியில் திட்டங்கள்  கண்காணிப்பு அலுவலர் பிரகாஷ் தகவல்
x
தினத்தந்தி 16 Jun 2021 9:16 PM IST (Updated: 16 Jun 2021 9:16 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில் ரூ.950 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்று கண்காணிப்பு அலுவலர் பிரகாஷ் கூறினார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில் ரூ.950 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்று கண்காணிப்பு அலுவலர் பிரகாஷ் கூறினார்.
இது குறித்து அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா வைரஸ்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கொரோனா பரவல் 6 சதவீதத்தை விட குறைந்து உள்ளது. அதிக பாதிப்பு உள்ள இடங்களை கண்டறிந்து பரிசோதனைகளை அதிகரித்து பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். 2-ம் அலையில் இருந்து வெளியில் வருவதுதான் நமது தற்போதைய நோக்கமாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக உலகம் முழுவதும் வல்லுநர்கள், சுகாதாரத்துறையினர் 3-வது அலை குழந்தைகளை தாக்கும் என்ற கருத்து தெரிவித்து வருகின்றனர். அதற்கு தயார் நிலைப்படுத்தும் வகையில் பல்வேறு செயல்பாடுகள் தொடங்கப்பட்டு உள்ளன. அதன்படி வீடுதோறும் ஆய்வு செய்தல், வீடுகளில் தனிமைப்படுத்தி இருப்பவர்களுக்கு தேவையான மருந்து உள்ளிட்டவற்றை கொடுப்பதற்கு போதுமான ஆட்களை நியமித்தல், அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகரித்தல் போன்ற பணிகள் வேகமாக செய்யப்பட்டு வருகிறது. குறுகிய காலத்துக்குள் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, அடுத்த அலைக்கு முன்பு தயாராக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறோம்.
தனிமைப்படுத்த..
இதற்காக மைக்ரோ திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் ஒவ்வொரு பகுதியையும் சிறு, சிறு பகுதிகளாக பிரித்து, ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு நபர் நியமிக்கப்படுவார். அந்த நபர் தினமும் வீடுகளுக்கு நேரடியாக சென்று மக்களுக்கு ஏதேனும் சளி, காய்ச்சல், இருமல் போன்ற தொந்தரவுகள் உள்ளதா என்று கணக்கெடுத்து நோட்டில் பதிவு செய்வார்கள். இதன் மூலம் தொற்று ஏற்பட்டால் எளிதில் கண்டறிய முடியும். அந்தந்த தெரு முனையில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுவதால் மக்கள் சிறு தொந்தரவு இருந்தாலும் டாக்டரை அணுகலாம். இதனால் தொற்று ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியும். மேலும் இந்த திட்டத்தில் வரும் காலங்களில் கொரோனா பரிசோதனை செய்தவர்கள், அந்த பரிசோதனை முடிவுகள் வரும் வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுபோன்ற அம்சங்களுடன் மைக்ரோ திட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும்.
ஆக்சிஜன் படுக்கைகள்
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் 16 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜனை சேமித்து வைக்கும் டேங்குகள் உள்ளன. இதன் முலம் சுமார் 800 பேரை நீண்ட நாட்களுக்கு ஆக்சிஜன் பயன்பாட்டில் வைத்து பராமரிக்க முடியும். தற்போது 550 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன. இதனை 900 படுக்கைகளாக அதிகரிப்பதற்கான நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், ஐ.சி.யு. வலிமையாக இருந்தால், அடுத்த அலையை எளிதில் எதிர்கொள்ள முடியும்.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பெரிய திட்டங்களையும் ஆய்வு செய்து உள்ளேன். தூத்துக்குடியில் மழைநீர் தேங்குவதை தடுப்பதற்காக ரூ.950 கோடியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ஸ்மார்ட் ரோடு ஒரு தடவை அமைத்தால் 30 ஆண்டுகளுக்கு நிலையாக இருக்கும். இது போன்ற திட்டங்களை ஆய்வு செய்து உள்ளோம். 2 கூட்டு குடிநீர் திட்டங்கள் நிறைவடைந்து பரிசோதனையில் உள்ளது. ஒருவாரத்துக்குள் அந்த திட்டம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. மாவட்டத்தில் புதிய தேவைகள் உள்ளதா என்றும் ஆய்வு செய்து வருகிறோம். திருச்செந்தூர், சாத்தான்குளம் பகுதியில் உள்ள 53 குளங்களை தூர்வாருவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. திருச்செந்தூருக்கு பக்தர்கள் வரும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் ஊருக்கு வெளியில் தனியாக வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யவும் ஆய்வு செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். அவருடன் கலெக்டர் செந் தில்ராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story