தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் உடுமலை பகுதியில் காய்கறிகள் நாற்று உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் உடுமலை பகுதியில் காய்கறிகள் நாற்று உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
போடிப்பட்டி
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் உடுமலை பகுதியில் காய்கறிகள் நாற்று உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பாரம்பரிய விவசாயம்
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில் தென்னை, கரும்பு, மக்காச்சோளம் சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது. இதுதவிர காய்கறிகள் சாகுபடியில் ஏராளமான விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறைந்த கால சாகுபடி, தொடர் வருவாய் என்ற அடிப்படையில் விவசாயிகளின் விருப்பத் தேர்வாக காய்கறிகள் சாகுபடி மாறியுள்ளது. நமது பாரம்பரிய விவசாயத்தில் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான விதைகளை தாங்களே உற்பத்தி செய்து கொண்டனர்.
மேலும் அந்த விதைகளைப் பயன்படுத்தி காய்கறி நாற்றுகளை அவர்களே உற்பத்தி செய்தனர். ஆனால் தற்போது அதிக மகசூலைக் கருத்தில் கொண்டு பாரம்பரிய நாட்டு ரகங்களைத் தவிர்த்து வீரிய ஒட்டு ரகங்களைப் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் காய்கறி நாற்றுகளை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் ஆங்காங்கே தனியார் நாற்றுப்பண்ணைகள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. இவை ஒவ்வொன்றும் சுமார் 10 லட்சம் நாற்றுகள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவையாக உள்ளன.
நாற்று உற்பத்தி
மேலும் அரசு சார்பில் சங்கராமநல்லூர் பேரூராட்சி மடத்தூரில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையிலும் காய்கறி நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை பெரும்பாலும் பசுமைக்குடில் அமைத்து இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் குழித்தட்டு முறையில் நாற்று உற்பத்தியில் ஈடுபடுகின்றன. நடப்பு பருவத்தில் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியுள்ளதால் தக்காளி, மிளகாய், வெண்டை, கத்தரி உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடி தொடங்கியுள்ளது. இதனைக்கருத்தில் கொண்டு தனியார் நாற்றுப் பண்ணைகளில் நாற்று உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில் அரசு தோட்டக்கலைப்பண்ணையில் நாற்று உற்பத்தி இதுவரை தொடங்கவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தக்காளி நாற்றுக்களை 22 நாட்களுக்கு மேலும் மற்ற காய்கறிப் பயிர்களை 30 நாட்களுக்கு மேலும் வாங்கிச்சென்று நடவு செய்கின்றனர். தற்போதைய நிலையில் தனியார் நாற்றுப் பண்ணைகளில் அதிக விலை கொடுத்து காய்கறி நாற்றுகளை வாங்கி நடவு செய்கிறோம். அரசு தோட்டக்கலைப்பண்ணையில் குறிப்பிட்ட ரகக் காய்கறி நாற்றுக்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே அனைத்து ரக நாற்றுக்களும் அரசு தோட்டக்கலைப்பண்ணையில் உற்பத்தி செய்து தோட்டக்கலைத்துறை மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கூறினர்.
இதுகுறித்து அரசு தோட்டக்கலைப் பண்ணை அதிகாரிகள் கூறியதாவது:-
குழித்தட்டு முறையில்
இங்கு தக்காளி, மிளகாய், கத்தரி, காலிபிளவர் ஆகிய காய்கறி நாற்றுகள் குழித்தட்டு முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டில் 38 லட்சம் தக்காளி நாற்றுகள் உள்பட 60 லட்சம் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர பப்பாளி, முருங்கை கன்றுகளும் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் கொரோனாவால் ஏற்பட்ட பல்வேறு இடர்பாடுகளால் இன்னும் விதைகள் வரவில்லை. விதைகள் வந்ததும் விரைவில் நாற்று உற்பத்தி தொடங்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story