ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசிகள் அனைத்தும் உடனே மக்களுக்கு கிடைக்கும் என்று புதிதாக பொறுப்பேற்ற திருப்பூர் கலெக்டர் கூறினார்.


ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசிகள் அனைத்தும் உடனே மக்களுக்கு கிடைக்கும் என்று புதிதாக பொறுப்பேற்ற திருப்பூர்  கலெக்டர் கூறினார்.
x
தினத்தந்தி 16 Jun 2021 9:57 PM IST (Updated: 16 Jun 2021 9:57 PM IST)
t-max-icont-min-icon

ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசிகள் அனைத்தும் உடனே மக்களுக்கு கிடைக்கும் என்று புதிதாக பொறுப்பேற்ற திருப்பூர் கலெக்டர் கூறினார்.

திருப்பூர்
ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசிகள் அனைத்தும் உடனே மக்களுக்கு கிடைக்கும் என்று புதிதாக பொறுப்பேற்ற திருப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் கூறினார்.
7-வது கலெக்டர்
திருப்பூர் மாவட்டம் கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ந் தேதி உதயமானது. மாவட்டத்தின் முதல் கலெக்டராக சமயமூர்த்தி பணியாற்றினார். அதன்பிறகு மதிவாணன், கோவிந்தராஜ், ஜெயந்தி, பழனிசாமி ஆகியோர் பணியாற்றினார்கள். கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந் தேதி முதல் கலெக்டராக விஜயகார்த்திகேயன் பணியாற்றினார். இந்த நிலையில் அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதிலாக திருப்பூர் மாவட்டத்தின் 7-வது கலெக்டராக தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இணை நிர்வாக இயக்குனராக இருந்த எஸ்.வினீத் நியமிக்கப்பட்டார். இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். திருவனந்தபுரத்தில் மருத்துவம் படித்து காசர்கோடு அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றினார்.
பொறுப்பேற்றார்
கடந்த 2013-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றார். அதன்பிறகு தமிழகத்தில் ராமநாதபுரத்தில் சப்-கலெக்டராக பணியாற்றினார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 2017-ம் ஆண்டு சப்-கலெக்டராக பணியாற்றினார். பின்னர் நீலகிரியில் இண்ட்கோசர்வ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
இந்தநிலையில் நேற்று காலை திருப்பூர் மாவட்ட கலெக்டராக எஸ்.வினீத் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு மாவட்ட அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
அரசின் திட்டங்கள்
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றத்தில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாடு அரசின் திட்டங்கள் சீராகவும், சிறப்பாகவும் மக்களிடம் சென்று சேர்ப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனைத்து துறையுடன் இணைந்து பணியாற்றும். இந்த வாய்ப்பை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி.
முதல்கட்டமாக மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்து துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்படும். கொரோனா தடுப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
மக்களுக்கு தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு
முதல்கட்ட ஆய்வில் ஒவ்வொரு துறையில் உள்ளவர்களும் குறிப்பிட்ட தகவல்களை தெரிவித்துள்ளனர். பிரச்சினைகள் இல்லாமல் தடுப்பு பணிகள் துரிதப்படுத்தப்படும். கொரோனா தடுப்பூசி போடும் மையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசிகள் அனைத்தும், குறிப்பிட்ட நாட்களில் உடனடியாக மக்களுக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்துக்கு அதிகமான அளவில் தடுப்பூசிகள் வாங்குவதற்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடுப்பூசிகள் நமக்கு கிடைத்ததும் அவை உடனடியாக மக்களுக்கு சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா பரிசோதனை முடிவுகள்
கொரோனா பரிசோதனை மேற்கொண்டு முடிவு கிடைப்பதில் தாமதம் இருப்பதாக தெரிவிக்கிறார்கள். அதிகப்படியான சோதனைகள் நடப்பதால் இந்த தாமதம் என்று தெரிவித்தனர். ஒருங்கிணைப்பு குழு அமைத்து கொரோனா பரிசோதனை முடிவுகள் விரைந்து சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசின் வழிமுறைகளை பின்பற்றி மக்களுக்கு தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா தாக்கம் மாவட்டத்தில் குறைந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story