அணைகள் திறப்பு எதிரொலி: திருக்குவளையில், குறுவை சாகுபடியில் விவசாயிகள் மும்முரம் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்


அணைகள் திறப்பு எதிரொலி: திருக்குவளையில், குறுவை சாகுபடியில் விவசாயிகள் மும்முரம் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 16 Jun 2021 10:22 PM IST (Updated: 16 Jun 2021 10:22 PM IST)
t-max-icont-min-icon

அணைகள் திறக்கப்பட்டதன் எதிரொலியாக குறுவை சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

வேளாங்கண்ணி:-

அணைகள் திறக்கப்பட்டதன் எதிரொலியாக குறுவை சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். 

மேட்டூர் அணை திறப்பு

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். குறிப்பிட்ட தேதியில் அணை திறக்கப்பட்டு, பருவமழையும் எதிர்பார்த்த அளவு பெய்தால், டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகமும் நெல் சாகுபடி நடைபெறும். 
மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு குறைவாக இருக்கும்பட்சத்தில் ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படமாட்டாது. அப்போது குறுவை, சம்பா பருவ நெல் சாகுபடி பணிகள் பாதிக்கப்படும். இந்த ஆண்டு அணையில் நீர் இருப்பு போதுமான அளவு இருந்ததால் குறித்த தேதியில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. 

விவசாயிகள் உற்சாகம்

மேட்டூர் அணை நீர் கல்லணையை வந்தடைந்ததை தொடர்ந்து நேற்று கல்லணையில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. எதிர்பார்த்தபடி அணைகள் திறக்கப்பட்டதால், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் உற்சாகம் அடைந்து உள்ளனர். 
காவிரி ஆற்றங்கரை பகுதிகள் தொடங்கி, நாகை போன்ற கடைமடை பகுதிகள் வரை தற்போது குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. நெல் சாகுபடிக்கு வயல்களை தயார் செய்வது, வரப்புகளை சீரமைப்பது, நாற்றங்கால் அமைப்பது என பல்வேறு விதமான பணிகள் டெல்டா முழுவதும் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகின்றன. 

திருக்குவளை

அணைகள் திறக்கப்பட்டதன் எதிரொலியாக திருக்குவளை தாலுகா எட்டுக்குடி, முத்தரசபுரம், சித்தாய்மூர், கொளப்பாடு, பனங்காடி, கச்சநகரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் குறுகிய கால குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். குறுகிய கால குறுவை சாகுபடியானது ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் அறுவடை செய்வதாகும். 
நிலத்தடி நீர் இல்லாத பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் குளங்கள் மற்றும் குட்டைகளில் உள்ள நீரை கொண்டு நாற்றங்கால் தயார் செய்து விதைகள் தெளிக்கும் பணியை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். மற்ற விவசாயிகள் மேட்டூர் அணை தண்ணீரை நம்பி நேரடி நெல் விதைப்பு முறையில் சாகுபடி பணிகளை தொடங்கி உள்ளனர். இந்த பகுதியில் 25 நாட்கள் முதல் 30 நாட்களுக்குள் தயாரான நாற்றுகளை பறித்து நடவு செய்வார்கள். 

தூர்வாரும் பணி

இந்த நிலையில் வாய்க்கால் தூர்வாரும் பணியை விரைந்து முடித்து கடைமடை பகுதிக்கு காவிரி நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். 
மேலும் உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Next Story