கொரோனா 3-வது அலை வந்தாலும் எளிதாக எதிர்கொள்ளலாம்


கொரோனா 3-வது அலை வந்தாலும் எளிதாக எதிர்கொள்ளலாம்
x
தினத்தந்தி 16 Jun 2021 10:34 PM IST (Updated: 16 Jun 2021 10:34 PM IST)
t-max-icont-min-icon

அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டால், கொரோனா 3வது அலை வந்தாலும் எளிதாக எதிர் கொள்ளலாம் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

புதுச்சேரி, ஜூன்.17-
அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டால், கொரோனா   3-வது அலை       வந்தாலும் எளிதாக எதிர் கொள்ளலாம் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
தடுப்பூசி திருவிழா
புதுவை சுகாதாரத்துறை சார்பில், நேற்று முதல் வருகிற 19-ந் தேதி வரை   தடுப்பூசி திருவிழா நடத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் 100 இடங்களில் இந்த சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. தொடக்க நாளான நேற்று, காந்தி வீதியில் உள்ள பெத்தி  செமினார்     மேல் நிலைப்பள்ளியில் நடந்த தடுப்பூசி முகாமை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன், நிதி மற்றும் வருவாய்த்துறை செயலர் அசோக்குமார், உள்ளாட்சி துறை செயலர் வல்லவன், சுகாதாரத்துறை செயலர் அருண், சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார், சுகாதார இயக்க திட்ட இயக்குனர் ஸ்ரீராமலு ஆகியோர் கலந்து கொண்டனர்.
மக்களிடம் விழிப்புணர்வு
இதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனாவை  கட்டுப் படுத்தும் ஒரே ஆயுதம் தடுப்பூசி தான்.   ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்ட மாநிலமாக புதுச்சேரியை மாற்ற வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.    இதற்காக புதுச் சேரியில் மீண்டும்  தடுப்பூசி திருவிழா 100 இடங்களில் நடத்தப்படுகின்றன.
தடுப்பூசி   தொடர்பாக மக்களிடம்   விழிப்புணர்வு வந்துள்ளது. மக்கள் தயக்கமில்லாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வந்திருக்கிறார்கள். ஒரு சிலரை தவிர பெரும்பாலானோர், முக கவசம் அணிந்து தான் வெளியே வருகின்றனர். சமூக இடைவெளியை கடைபிடிக்கின்றனர்.
தடுப்பூசிகள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது. பிரதமரும் தேவையான அளவு தடுப்பூசிகள் தருவதாக கூறியுள்ளார். மக்களின் பாதுகாப்பு கருதியே முழுமையாக செயல்பட்டு வருகிறோம். அதிக மக்கள்தொகை கொண்ட இந்திய நாட்டில் அனைவரும், இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலை உருவாகப்போகிறது.
எதிர்கொள்ள முடியும்
மற்ற மாநிலங்களில் முழுமையான ஊரடங்கு இருந்து வந்த நிலையில் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு புதுச்சேரியில் தளர்வுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தி, அதில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம்.
கொரோனா 3-வது அலை வரக்கூடாது. தடுப்பூசி போட்டுக் கொண்டால் 3-வது அலை வந்தாலும் எளிதாக எதிர்கொள்ள முடியும். அதனை எதிர்கொள்வதற்கும் புதுச்சேரி அரசு தயார் நிலையில் உள்ளது. மக்கள் அலை அலையாக வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டால், 3-வது காணாமல் போய் விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story