தடுப்பூசி முகாம்களில் சமூக இடைவெளியை மறந்து குவியும் பொதுமக்கள்


தடுப்பூசி முகாம்களில் சமூக இடைவெளியை  மறந்து குவியும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 16 Jun 2021 10:37 PM IST (Updated: 16 Jun 2021 10:37 PM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் நடைபெற்ற முகாமில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். ஆனால் இதுபோன்ற முகாம்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

காரைக்குடி,ஜூன்.
காரைக்குடியில் நடைபெற்ற முகாமில் ஏராளமானோர்  நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். ஆனால் இதுபோன்ற முகாம்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
ஆர்வம் அதிகரிப்பு
கொரோனா 2-வது அலை தீவிரமாக உள்ளதால் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டு விட்டது. மேலும் ஏராளமானோர் கொரோனா பாதிப்பால் மிகுந்த துயரத்தை அனுபவித்து விட்டனர்.
எனவே கொரோனா பாதிப்பின் தீவிரத்தை உணர்ந்து பொதுமக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்வதில் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்களுக்கு ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் அரசு சார்பிலும், பல்வேறு தனியார் அமைப்புகள் மற்றும் சமூக நல அமைப்புகள் சார்பிலும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
காரைக்குடி
காரைக்குடியில் புதிய பஸ் நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் காரைக்குடியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று காரைக்குடியை அடுத்த சங்கராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடந்த தடுப்பூசி முகாமில் ஏராளமான பொதுமக்கள், குறிப்பாக, பெண்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். ஆனால் இங்கு சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாத நிலையே இருந்தது.
எனவே கொரோனா இன்னும் ஒழிய வில்லை என்பதை மனதில் நிறுத்தி இதுபோன்ற தடுப்பூசி முகாம்களிலும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டியதும் அவசியமாகும்.
இதனிடையே சிங்கம்புணரி பேரூராட்சி பகுதிக்கு நேற்று சுமார் 116 தடுப்பூசிகள் வந்தன. இதையறிந்த பொதுமக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் சிங்கம்புணரி அரசு பொது மருத்துவமனையில் குவிந்தனர். இதனால் கொேரானா பரவல் அபாயம் ஏற்பட்டது. 
இதைத் தொடர்ந்து அவர்களில் 116 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டு முதல் தவணையாக 111 பேருக்கும், 2-வது தவணையாக 6 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாததால் பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து வந்த செவிலியர்கள் தடுப்பூசி போட்டனர். எனவே சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story