கிராமத்துக்கு வழிகேட்ட போலீஸ்காரர் மீது தாக்குதல்


கிராமத்துக்கு வழிகேட்ட போலீஸ்காரர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 16 Jun 2021 5:22 PM GMT (Updated: 16 Jun 2021 5:22 PM GMT)

கள்ளக்குறிச்சி அருகே கிராமத்துக்கு செல்ல வழிகேட்ட போலீஸ்காரரை தாக்கிய அரசு பஸ்டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கள்ளக்குறிச்சி

போலீஸ்காரர்

தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் ராம்கி(வயது 34). இவர் சம்பவத்தன்று இரவு பணிக்காக கள்ளக்குறிச்சியில்இருந்து தனக்கு சொந்தமான காரில் புறப்பட்டு தியாகதுருகம் போலீஸ் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது வழியில் பழையசிறுவங்கூர் கிராமத்தில் ஏதோ பிரச்சனை நடப்பதாகவும் எனவே அந்த கிராமத்துக்கு செல்லுமாறு போலீஸ் நிலையதத்தில் இருந்து அவரது செல்போனுக்கு உத்தரவு வந்தது. இதையடுத்து ராம்கி காரில்  பழையசிறுவங்கூருக்கு சென்று கொண்டிருந்தார். 

கொலை மிரட்டல்

ரோடுமாமனந்தல்- அகரக்கோட்டாலம் சாலையில் வந்த போது அவர் வழி தெரியாமல் தடுமாறினார். எனவே ராம்கி ரங்கநாதபுரம் பிரிவு சாலை அருகே காரை நிறுத்திவிட்டு அங்கு நின்று கொண்டிருந்த 2 பேரிடம் பழையசிறுவங்கூர் கிராமத்துக்கு செல்ல வழி கேட்டார்.ஆனால் அவர்கள் ஆபாசமாக  திட்டி ராம்கியின் முகத்தில் கையால் குத்தினர். பின்னர் அவர்கள் வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. 

வலைவீச்சு

பின்னர் இது குறித்து ராம்கி கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ராம்கியை தாக்கிய நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அரசு போக்குவரத்துக்கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வரும் ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த தென்னரசு(43), அரியபெருமானூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர்(41) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவுசெய்த போலீசார் இருவரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். 

Next Story