40 படுக்கைகள் கொண்ட குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மையம்
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 40 படுக்கைகள் கொண்ட குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 40 படுக்கைகள் கொண்ட குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
கொரோனா சிகிச்சை மையம்
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மையம் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் மெய்யநாதன் தலைமை தாங்கினார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் லலிதா வரவேற்றார். இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.
தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவல் 3-வது அலை பாதிப்பு ஏற்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த அலையின் தாக்கத்தால் குழந்தைகள் பாதிக்கப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளிவந்துள்ளது. இதனையடுத்து தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மைய பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
40 படுக்கைகள்
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 6 தீவிர சிகிச்சைக்கான படுக்கைகள் உட்பட 40 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது என்றார்.
தொடர்ந்து கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் 2 நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து விசாரித்தார். மேலும் அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை அமைச்சர் பார்வையிட்டார். இதை தொடர்ந்து மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் மா.சுப்ரமணியன் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா நோய் கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார். முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை மாற்றி காண்பிக்க வேண்டும் என அலுவலர்களிடம் அமைச்சர் அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சிகளில் எம்.எல்.ஏ., க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை இயக்குனர் செல்வ விநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இயக்குனர் டாக்டர் குருநாதன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறைக்கு வந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் மயிலாடுதுறை ஒன்றிய குழு தலைவி காமாட்சி மூர்த்தி கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- மயிலாடுதுறை ரெயிலடி மாமரத்து மேடை பகுதியில் கடந்த இயங்கி வந்த நகராட்சி சித்த மருத்துவமனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டு விட்டது. தற்போது அந்த மருத்துவமனை கட்டிடம் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. எனவே அந்த கட்டிடத்தின் பழுதை நீக்கி உடனே சித்த மருத்துவமனை தொடங்க வேண்டும். அதேபோல மயிலாடுதுறை, தரங்கம்பாடி சாலையில் நகராட்சிக்கு சொந்தமான மகப்பேறு மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இந்த மருத்துவமனையும் மூடப்பட்டுவிட்டது. இதனையும் சீரமைத்து மீண்டும் மகப்பேறு மருத்துவமனை தொடங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story