கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய கலெக்டர் பி என் ஸ்ரீதர் பொறுப்பேற்பு


கள்ளக்குறிச்சி மாவட்ட  புதிய கலெக்டர் பி என் ஸ்ரீதர் பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 16 Jun 2021 5:31 PM GMT (Updated: 16 Jun 2021 5:31 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய கலெக்டராக பி என் ஸ்ரீதர் பொறுப்பேற்றுக்கொண்டார். அரசின் திட்டங்களை விரைவாக செயல்படு்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்

கள்ளக்குறிச்சி

புதிய கலெக்டர்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டராக பணிபுரிந்து வந்த கிரண்குராலா தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராகவும் பெருநகர சென்னை மாநகராட்சியில் இணை ஆணையராக பணிபுரிந்து வந்த பி.என்.ஸ்ரீதர் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டராகவும் இடமாற்றம் செய்து தமிழகஅரசு உத்தரவிட்டது.
இதையடுத்து புதிய கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் நேற்று கள்ளக்குறிச்சியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட திட்ட இயக்குனர் முருக்கண்ணன், செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் கலையரசன் மற்றும் அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அடிப்படை தேவைகளில் கவனம்

அரசின் அனைத்து திட்டங்களையும் விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன். பொதுமக்களின் அடிப்படை தேவைகளில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படும். 
தற்போது கொரோனா தொற்று மற்றும் தடுப்பு நடவடிக்கைகளான தடுப்பூசி, ஆக்ஸிஜன், படுக்கை வசதிகள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, கொரோனா செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்பு துறைகளின் செயல்பாடுகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 

மனுக்கள் மீது நடவடிக்கை

உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் முழுமையாக தீர்வுகாண நடவடிக்கை எடுப்பேன். 
இந்த மாவட்டத்தில் மலைவாழ் மக்கள் அதிகம் உள்ளதால் அவர்களுக்காக தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் அவர்களுக்கு விரைந்து சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். 

2-வது கலெக்டர்

புதிதாக பொறுப்பேற்றுள்ள கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் 2-வது கலெக்டர் ஆவார். இவரது சொந்த ஊர் ஐதராபாத் ஆகும். மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகள் இவருக்கு நன்கு தெரியும். ஏற்கனவே திண்டிவனத்தில் சப்-கலெக்டராக 2 ஆண்டுகள் பணிபுரிந்த பி.என்.ஸ்ரீதர் பின்னர் பெரு நகர சென்னை மாநகராட்சி மத்திய வட்டார இணை ஆணையாளராக 2 ஆண்டுகள் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பி.என்.ஸ்ரீதர் உயர் கல்விதுறை அமைச்சர் பொன்முடியை சந்தித்து வாழ்துப்பெற்றார்.

Next Story