பொள்ளாச்சி மின்வாரிய அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்த அலைமோதிய கூட்டம்


பொள்ளாச்சி மின்வாரிய அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்த அலைமோதிய கூட்டம்
x
தினத்தந்தி 16 Jun 2021 11:28 PM IST (Updated: 16 Jun 2021 11:28 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி மின்வாரிய அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்த கூட்டம் அலைமோதியது.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி மின்வாரிய அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்த கூட்டம் அலைமோதியது.

மின் கட்டணம்

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மாதம் 24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கால் பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் மின் கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசத்தை அரசு நீட்டித்தது.

 இதன்படி வீட்டு இணைப்புகள் மற்றும் வணிக நோக்கத்திற்கு பயன்படுத்தப்படும் மின் இணைப்புகளுக்கு மின் கட்டணம் செலுத்த  நேற்று முன்தினம் வரை இந்த அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டது.
இந்த நிலையில் மின் கட்டண மையங்களில் அபராதமின்றி கட்டணம் செலுத்த வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்று முன்தினம் முடிந்தது.

 ஆனாலும் இதுவரை மின் கட்டணம் செலுத்தாதவர்கள் அவசரஅவசரமாக மின் கட்டணத்தை செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

அலைமோதும் கூட்டம்

மின் கட்டணத்தை இணையதளம், செல்போன் செயலி போன்ற டிஜிட்டல் முறையில் எங்கிருந்து வேண்டுமானாலும் செலுத்தும் வசதி உள்ளது. இருப்பினும் பெரும்பாலும் மின்வாரிய அலுவலகத்திலேயே மின் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர்.

 இதையடுத்து பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் கடந்த 3 நாட்களாக மின் கட்டணம் செலுத்துவதற்கு கூட்டம் அலைமோதுகிறது. நீண்ட வரிசையில் காத்திருந்து மின் கட்டணத்தை பொதுமக்கள் செலுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சி மின்வாரிய கோட்டத்தின் கீழ் பெதப்பம்பட்டி, பொள்ளாச்சி நகரம், ஏரிப்பட்டி, ஜமீன்முத்தூர், மார்ச்சநாயக்கன்பாளையம், சமத்தூர் உள்ளிட்ட 16 துணை மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. 

2 மாதத்திற்கு ஒரு முறை கணக்கீடு செய்து மின் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மாத மின் கட்டணத்தை கணக்கிட முடியவில்லை. இதன் காரணமாக கடந்த 2019-ம் ஆண்டு மே மாத மின் கணக்கீடு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

 இதற்கிடையில் கட்டண தொகை அதிகமாக இருந்தால் மின் நுகர்வோர் சுயமாக கணக்கீடு செய்து, அந்த தகவலை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏராளமான மின் நுகர்வோர்கள் கணக்கீடு செய்து அனுப்பினர்.

மின்வாரிய பணிகளுக்கு ஒத்துழைப்பு

இந்த நிலையில் மின் கட்டண செலுத்த நீட்டிப்பு செய்த காலஅவகாசம் முடிந்து விட்டதால், பொதுமக்கள் அலுவலகத்திற்கு வந்து மின் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மட்டும் கடந்த 3 நாட்களில் சுமார் 2,300 பேர் மின் கட்டணத்தை செலுத்தி உள்ளனர்.

கடந்த மாதம் 64,588 மின் நுகர்வோர்கள் மின் கட்டணம் செலுத்த வேண்டும். இதில் 10,848 பேர் மின் கட்டணம் செலுத்தி உள்ளனர். இதற்கிடையில் கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் அலுவலகத்திற்கு வருவதை தவிர்த்து, இணையதளம் மூலம் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். மேலும் மின் கட்டணத்தை விரைவில் செலுத்தி மின்வாரிய பணிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story