பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றம்


பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றம்
x
தினத்தந்தி 16 Jun 2021 11:32 PM IST (Updated: 16 Jun 2021 11:32 PM IST)
t-max-icont-min-icon

பில்லூர் அணையின் நீர்மட்டம் 93 அடியாக உயர்ந்ததையடுத்து அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம்

பில்லூர் அணையின் நீர்மட்டம் 93 அடியாக உயர்ந்ததையடுத்து அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பில்லூர் அணை

தமிழக-கேரள எல்லை பகுதியில் கோவை மாவட்டத்தில் பில்லூர் அணை உள்ளது. கேரளா, நீலகிரி மாவட்டம் மற்றும் நீர்தேக்க பகுதிகளில் பெய்யும் மழை நீரை ஆதாரமாக கொண்டு இந்த அணை கட்டப்பட்டது. தற்போது கேரளா மற்றும் நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று காலை பில்லூர் அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணை நீர்மட்டம் நேற்று இரவு 9 மணி நிலவரப்படி 93 அடியாக உயர்ந்தது. பில்லூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் பாதுகாப்பு கருதி, வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியும், மின்உற்பத்திக்கு பின் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியும் என மொத்தம் வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

இதன் காரணமாக மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவின்பரில் மேட்டுப்பாளையம் தாசில்தார் ஷர்மிளா பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். 

சிறுமுகையில் சிறுமுகை பேரூராட்சி மற்றும் காவல்துறை சார்பில் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர். 

மேலும் பில்லூர் அணை மின்சார உதவி செயற்பொறியாளர் தலைமையில் பொறியாளர்கள் மேற்பார்வையில் அணைக்கு நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர். அணையின் நீர்மட்டம் 97 அடியாக உயரும் போது அணையின் பாதுகாப்பு கருதி அணையின் 4 மதகுகளில் இருந்து எந்த நேரமும் தண்ணீர் திறந்துவிடப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story