பிரசவித்த தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி


பிரசவித்த தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி
x
தினத்தந்தி 16 Jun 2021 11:37 PM IST (Updated: 16 Jun 2021 11:37 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்தார்.

சிவகங்கை,ஜூன்.
சிவகங்கை மாவட்டத்தில் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்தார்.
அரசு உத்தரவு
பிரசவித்த தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையிலும், மருத்துவக் கல்லூரி டீன் ரேவதி முன்னிலையிலும் நடைபெற்றது. 
நிகழ்ச்சியில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது:-
கொரோனா பெருந்தொற்றை தடுக்கும் பேராயுதமாக தடுப்பூசி விளங்குகிறது. இந்தியாவில் முதற்கட்டமாக மருத்துவர்கள் மற்றும் முன் களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 45 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கும், அதன் பின்னர் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
பிரசவித்த தாய்மார்கள்
இந்த நிலையில் பிரசவித்த பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி போட மருத்துவத் துறை அனுமதி அளித்துள்ளது. இதன் அடிப்படையில் அரசு மருத்துவமனைகள் மூலம் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. குழந்தை பிறந்த 2-ம் நாள் முதல் கொரோனா தடுப்பூசியை போடலாம். தற்போது முதல் கட்டமாக மருத்துவ கல்லூரியில் தடுப்பூசி போடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிரசவித்த தாய்மார்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
5,717 பேர்
கடந்த டிசம்பர் மாதம் முதல் பிரசவித்த பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதன் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் 5,717 தாய்மார்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. மேலும் இம்மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 45 ஆயிரத்து 438 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 215 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 25 ஆயிரத்து 223 பேர் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். தற்போது கோவிஷீல்டு தடுப்பூசி 8,500-ம், கோவாக்சின் தடுப்பூசி 2,000-ம் கையிருப்பில் உள்ளது. 2 நாட்களுக்கு ஒருமுறை தடுப்பூசிகள் வருகின்றன. எனவே பொதுமக்கள் தயங்காமல் தடுப்பூசி செலுத்திக் கொண்டு கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பாலமுருகன், நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் மீனாள், மகப்பேறு மருத்துவ பிரிவின் பேராசிரியர் டாக்டர் காயத்ரி, உதவி நிலைய மருத்துவர்கள் முகம்மது ரபி, மிதுன், வித்யாஸ்ரீ மற்றும் செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story