கடலூர் வழியாக செந்தூர், சோழன் விரைவு ரெயில்கள் மீண்டும் இயக்கம் பயணிகள் மகிழ்ச்சி


கடலூர் வழியாக செந்தூர், சோழன் விரைவு ரெயில்கள் மீண்டும் இயக்கம் பயணிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 16 Jun 2021 11:46 PM IST (Updated: 16 Jun 2021 11:46 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் வழியாக செந்தூர், சோழன் விரைவு ரெயில்கள் மீண்டும் இயக்கப்பட்டது.

கடலூர், 

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த மாதம் முதல் நிறுத்தப்பட்ட பொது போக்குவரத்து தொடங்கப்படவில்லை. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் பஸ், ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஆனால் அதிக பயணிகள் பயன்படுத்தும் ரெயில்கள் மட்டும் மற்ற மாவட்டங்களில் சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டம் வழியாக எந்த ரெயில்களும் இயக்கப்படவில்லை. 

இதனால் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வெளி மாவட்டங்களுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. பணி நிமித்தமாக செல்வோரும் செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இதை போக்கும் வகையில் ஏற்கனவே சென்று வந்த ஒரு சில ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி நேற்று முதல் கடலூர் வழியாக செல்லும் சோழன் விரைவு ரெயில்கள், தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் திருச்செந்தூர் விரைவு ரெயில் இயக்கப்பட்டன.

ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்கள் மட்டும் பயணம் செய்தனர். ரெயில் நிலையத்தில் டிக்கெட் வழங்கப்படமாட்டாது என்று ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த ஒரு மாதத்திற்கு பிறகு ரெயில்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story