அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் 90 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர் அதிகாரி தகவல்


அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் 90 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 16 Jun 2021 11:51 PM IST (Updated: 16 Jun 2021 11:51 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் 90 சதவீதத்துக்கு மேல் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடலூர், 

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க கடந்த மாதம் 24-ந் தேதி முதல் முழு ஊரடங்கு ஒரு வாரத்திற்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் நோய்த்தொற்று குறையாததால் தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது.


இதற்கிடையில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி மளிகை, காய்கறி கடைகள் திறக்கப்பட்டன. அதன்பிறகு கடந்த 14-ந் தேதி முதல் வீட்டு உபயோக பொருட்கள், இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடைகள், டாஸ்மாக், சலூன் கடைகள், அழகு நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து

ஆனால் பொது போக்குவரத்து கடந்த மாதம் 10-ந் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் அறிவித்த தளர்வுகளிலும் போக்குவரத்து பற்றி தமிழக அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக வெளியிடங்களுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. அதேவேளையில் அரசு ஊழியர்களுக்கு மட்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல் வெளியிடங்களுக்கு செல்லும் பொது மக்களுக்கும் பஸ்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. 

இதனால் நோய்த்தொற்று குறைந்த மாவட்டங்களில் 50 சதவீத டவுன் பஸ்களை இயக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது. இருப்பினும் டிரைவர், கண்டக்டர்கள் தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. தடுப்பூசி போட்ட நபர்களின் பட்டியலை போக்குவரத்துக்கழகம் கேட்டு பெற்று வருகிறது.

இது பற்றி கடலூர் மாவட்ட போக்குவரத்து கழக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

90 சதவீதம் பேருக்கு தடுப்பூசி

கடலூர் மாவட்டத்தில் உள்ள 11 பணிமனைகளில் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதேவேளை பஸ்களை இயக்கும் டிரைவர், கண்டக்டர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். அதன்படி மாவட்டத்தில் 3850 டிரைவர், கண்டக்டர்கள் உள்ளனர். 

அவர்களில் 3700- க்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளனர். அதாவது 90 சதவீதத்துக்கு மேல் தடுப்பூசி போட்டுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்கள், பல்வேறு நோய் உள்ளவர்கள், நீண்ட விடுப்பில் உள்ளவர்கள் மட்டும் தடுப்பூசி போடவில்லை. 

அரசு எப்போது அறிவித்தாலும் பஸ்களை இயக்க தயாராக இருக்கிறோம். இதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் தீவிரமாக செய்து வருகிறோம் என்றார்.

Next Story