குளித்தலை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு வாளாந்தூர் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்


குளித்தலை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு வாளாந்தூர் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 17 Jun 2021 12:07 AM IST (Updated: 17 Jun 2021 12:07 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு வாளாந்தூர் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குளித்தலை
காத்திருப்பு போராட்டம்
கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றியம் ராஜேந்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாளாந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று குளித்தலை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இந்த போராட்டம் குறித்து தகவலறிந்து வந்த குளித்தலை கோட்டாட்சியர் (பொறுப்பு) தவசெல்வம், குளித்தலை உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் முரளிதரன், வட்டாட்சியர் கலியமூர்த்தி ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். 
அடிப்படை வசதி
அப்போது கிராமமக்கள் கூறுகையில், வாளாந்தூர் கிராமத்தில் சுமார் 300 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. பஸ்போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர், இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்தல் போன்ற அனைத்து தேவைகளுக்கும் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் மோட்டார் சைக்கிளிலோ அல்லது நடந்துதான் குளித்தலை நகரப் பகுதிக்கு வந்து செல்வோம். இல்லையெனில் வாளாந்தூரில் இருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள குளித்தலை ரெயில் நிலையம் உள்ள வழியாக தண்டவாளத்தை கடந்து குளித்தலை நகரப்பகுதிக்கு சென்று வந்தோம். 
குகைவழிப்பாதை
இந்த இரண்டு பாதைகளில் தூரம் குறைவான குளித்தலை ரெயில்நிலையம் வழியாக ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்லும் பாதையையே சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக பெறும்பாலும் பயன்படுத்திவந்தோம். இப்பாதையை பயன்படுத்திவந்ததால் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டது. இதன்காரணமாக குளித்தலை ரெயில் நிலையம் அருகே வாளாந்தூருக்கு சென்றுவர குகைவழிப்பாதை அமைக்கவேண்டுமென கோரிக்கை தொடர்ந்து எழுப்பி வந்தோம். இந்தநிலையில் கடந்த பல மாதங்களுக்கு முன்பு வாளாந்தூரில் இருந்து குளித்தலை ரெயில்நிலையம் வழியாக சென்று வந்த பாதையை ரெயில்வே நிர்வாகம் அடைக்கும் பணியில் ஈடுபட்டது. இதுகுறித்து அப்போதிருந்து குளித்தலை உதவி கலெக்டரிடம் நாங்கள் மனு அளித்தோம். பின்னர் அவர் நாங்கள் பயன்படுத்திவந்த பாதையை நேரில் பார்வையிட்டு உரிய முடிவுகாணும்வரை பாதையை அடைக்கக்கூடாது என தெரிவித்தகாரணத்தால் ரெயில்வே நிர்வாகம் பாதையை அடைக்கவில்லை. 
4 கிலோ மீட்டர் சுற்றி...
இந்தநிலையில் தற்போது மீண்டும் மண்கொட்டி நாங்கள் பயன்படுத்திவந்த பாதையை ரெயில்வே நிர்வாகம் மூடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த பாதை அடைக்கப்பட்டால், பள்ளி, மருத்துவமனை, சுடுகாடு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக சுமார் 4 கிலோமீட்டர் சுற்றிச்செல்லும் அவலநிலை ஏற்படும். 
எனவே வழக்கமாக நாங்கள் ரெயில்நிலையம் பகுதி வழியாக சென்று வந்த பாதையை அடைக்கக்கூடாது, அதை மீண்டும் பொதுமக்கள் சென்றவரும்வகையில் வழி ஏற்படுத்தவேண்டும். எங்கள் பகுதி மக்கள் நகரப்பகுதிக்கு சென்றுவர நிரந்தரமாக குகைவழிப்பாதை அமைத்துத்தரவேண்டும் என்று தெரிவித்தனர். 
பாதை அடைக்கும் பணி நிறுத்தம்
இதையடுத்து அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகளை குளித்தலை ரெயில்வே நிலைய அதிகாரிகளிடம் நேரடியாகச் சென்று பேசசெய்து தற்காலிகமாக பாதை அடைக்கும் பணியை நிறுத்தச்செய்தனர். இந்த தகவலை வாளாந்தூர் பகுதி மக்களிடம் தெரிவித்ததோடு, இந்த பாதை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண ரெயில்வேத்துறை அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர். 
இதனை ஏற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வாளாந்தூர் கிராமமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story