வீட்டு உபயோக பொருட்கள் மொத்த விற்பனை கடையில் ரூ.2 லட்சம் திருட்டு


வீட்டு உபயோக பொருட்கள் மொத்த விற்பனை கடையில் ரூ.2 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 16 Jun 2021 7:03 PM GMT (Updated: 16 Jun 2021 7:03 PM GMT)

விழுப்புரத்தில் வீட்டு உபயோக பொருட்கள் மொத்த விற்பனை கடையில் ரூ.2 லட்சத்தை திருடிச்சென்ற சிறுவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலையில் மிக்சி, கிரைண்டர், சமையல் கியாஸ் அடுப்பு உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் மொத்த விற்பனை கடை மற்றும் அந்த கடையையொட்டி குடோனும் உள்ளது. நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் இந்த கடையை அதன் ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை அந்த கடையை திறக்க ஊழியர்கள் வந்தபோது கடையின் முன்பக்க இரும்புக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டனர். உடனே உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. மேலும் குடோனில் உள்ள கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்து 220 ரொக்கம் திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

கண்காணிப்பு கேமராவில் சிக்கிய சிறுவன்

இதுகுறித்து கடையின் உரிமையாளரான புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த இளந்திருமாறன் விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருட்டு நடந்த கடையில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர்.
மேலும் அந்த கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்ததில் அந்த கேமரா பதிவில் ஒருவரின் உருவம் பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரித்தபோது அந்த நபர், விழுப்புரம் இந்திரா நகரை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் என்பது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதையடுத்து விழுப்புரம் இந்திரா நகர் பகுதிக்கு போலீசார் விரைந்து சென்று சிறுவனை  மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அவனிடம்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story