விழுப்புரம் மாவட்ட புதிய கலெக்டராக மோகன் பொறுப்பேற்பு
விழுப்புரம் மாவட்டத்தில் அரசுத்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அரசின் 7 அம்ச திட்டங்களில் முழு கவனம் செலுத்தி முழுமையாக செயல்படுத்தப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட கலெக்டர் டி.மோகன் கூறினார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த ஆ.அண்ணாதுரை வேளாண்மைத்துறை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சென்னையில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனராக பணியாற்றிய டி.மோகன், விழுப்புரம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.
இவர் நேற்று காலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தின் 21-வது கலெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டு அலுவலக கோப்புகளில் கையெழுத்திட்டார். அவரிடம் முன்னாள் கலெக்டர் ஆ.அண்ணாதுரை பொறுப்புகளை ஒப்படைத்தார். அதன் பின்னர் மாவட்ட கலெக்டர் டி.மோகன், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
7 அம்ச திட்டங்கள்
சென்னையில் நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட கலெக்டர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதில்அரசின் 7 அம்ச திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் விரிவாக எடுத்துரைத்தார். அந்த திட்டங்களை விழுப்புரம் மாவட்டத்தில் அரசுத்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் முழு கவனம் செலுத்தி முழுமையாக செயல்படுத்தப்படும்.
உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் எத்தனை மனுக்கள் வரப்பெற்றுள்ளனவோ அந்த மனுக்கள் அனைத்தையும் பரிசீலனை செய்து நல்ல முடிவு எடுக்கப்படும்.. வாரந்தோறும் திங்கட்கிழமையன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் சம்பிரதாயமாக இல்லாமல் ஒவ்வொரு மனுவையும் பார்த்து அதற்கான தீர்வு எடுக்க நடவடிக்கை எடுப்பேன்.
கொரோனா இல்லாத மாவட்டமாக்கப்படும்
தற்போது கொரோனா நோய் தொற்று ஓரளவு குறைந்து வருகிறது. மருத்துவத்துறை, காவல்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நோய் தொற்றை இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விழுப்புரத்தை முற்றிலும் நோய் தொற்று இல்லாத மாவட்டமாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழுப்புரம் மாவட்ட புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள டி.மோகனுக்கு சொந்த ஊர் தஞ்சாவூர். இவர் தனது பள்ளிப்படிப்பை அங்குள்ள செயின்ட் ஜான் பள்ளியில் படித்துள்ளார். பின்னர் என்ஜினீயரிங் படிப்பை காரைக்குடி அழகப்பா என்ஜினீயரிங் கல்லூரியிலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படிப்பையும் முடித்தார்.
தொடர்ந்து, 2005-ம் ஆண்டில் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று காஞ்சீபுரம் துணை ஆட்சியர் (பயிற்சி) பணியில் சேர்ந்தார். அதன் பின்னர் 2¼ ஆண்டு புதுக்கோட்டையில் கோட்டாட்சியராக பணியாற்றிய நிலையில் பதவி உயர்வு பெற்று சென்னையில் டாஸ்மாக் பொது மேலாளராக பொறுப்பேற்றார். அதன் பிறகு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக பொது மேலாளராகவும், பொது மரபுத்துறையிலும் பணியாற்றிய அவர், கவர்னரின் துணை செயலாளராக 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையராகவும், டாஸ்மாக் மேலாண்மை இயக்குனராகவும் பணியாற்றிய நிலையில் அங்கிருந்து தற்போது விழுப்புரம் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார்.
முன்னதாக மாவட்ட கலெக்டர் டி.மோகனுக்கு விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story