மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
கோவை
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
தென்மேற்கு பருவமழை
கோவை மாவட்டத்திற்கு அதிக அளவில் மழை தரக்கூடிய தென்மேற்கு பருவமழை கடந்த 12-ந் தேதி தொடங்கியது. கடந்த 4 நாட்களாக மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் கோவையில் உள்ள நொய்யல் ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
புதுவெள்ளம்
இந்த தண்ணீர் அனைத்தும் நொய்யல் ஆற்றில் கலந்ததால், ஆற்றில் புதுவெள்ளம் பாய்ந்து வருகிறது. இந்த ஆற்றில் உள்ள முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி அணையில் நுங்கும் நுரையுமாக நீர்வரத்து அதிகரித்து இருந்தது.
இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். மேலும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மாவட்டம் முழுவதும் மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்பதால் ஆறுகள் குளங்கள் நிரம்ப வாய்ப்பு இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அருவியில் வெள்ளப்பெருக்கு
மேலும் தொடர்மழை காரணமாக கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஊரடங்கு காரணமாக இந்த அருவிக்கு செல்ல பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிலையில் வெள்ளப்பெருக்கால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதுபோன்று சிறுவாணி அணை நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் நீர்மட்டம் உயர்ந்துவருவதாக குடிநீர் வடிகால் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்மேற்கு பருவ மழை பெய்யக்கூடிய பகுதிகளான மேட்டுப் பாளையம், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றங்கரையோர பகுதியில் வசித்து வரும் மக்கள் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர்.
மீட்பு படையினரும் தயார் நிலையில் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
மழை அளவு
கோவை மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மி.மீட்டர்) விவரம் வருமாறு:-
பொள்ளாச்சி-6 மி.மீ., சின்கோனா - 68, சின்னகல்லார் - 107, வால்பாறை (பி.ஏ.பி) - 39, சோலையார்-52, ஆழியாறு-6, கோவை வேளாண் பல்கலைக்கழகம் - 2.5 மி.மீ.
Related Tags :
Next Story