தைல மரக்காட்டில் தீ விபத்து


தைல மரக்காட்டில் தீ விபத்து
x
தினத்தந்தி 17 Jun 2021 2:07 AM IST (Updated: 17 Jun 2021 2:07 AM IST)
t-max-icont-min-icon

தைல மரக்காட்டில் தீ விபத்து ஏற்பட்டது

தா.பழூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான 5 ஏக்கர் பரப்பளவில் தைல மர காடு உள்ளது. அந்த காட்டின் வழியாக உயரழுத்த மின் தடம் ஒன்று அமைந்துள்ளது. காற்று வீசும்போது மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறி ஏற்பட்டு சறுகுகள் மீது விழும் போது தீ விபத்து ஏற்படுகிறது. அந்தவகையில் நேற்றும் மின்கம்பிகள் உரசி தீப்பொறி ஏற்பட்டு கீழே உள்ள சறுகுகள் மீது விழுந்ததில் தைல மரக்காட்டில் தீ பிடித்தது. இந்த தீ நீண்ட நேரம் எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் வனக்காவலர் ரவிசங்கருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். ஆனால் ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைக்கும் வாகனம் ஜெயங்கொண்டம் பகுதியில் வேறு ஒரு கிராமத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க சென்று விட்டதால் உடனடியாக அங்கிருந்து தீயணைப்பு வாகனம் வர இயலவில்லை. அதனைத்தொடர்ந்து தா.பழூர் போலீசார் மற்றும் வனத்துறை ஊழியர்கள் பொதுமக்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் செந்துறை தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வாகனம் அனுப்பி வைக்கப்பட்டு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.
 இதேபோல தா.பழூர் அருகே உள்ள அத்தனேரி கிராமத்திலும் தனியார் ஒருவருக்குச் சொந்தமான தைல மர காட்டில் தீ பற்றி எரிந்தது. ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அதிகாரி மோகன்ராஜ் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை ஆகிய ஊர்களில் மட்டுமே தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. ஒரே நேரத்தில் வெவ்வேறு பகுதிகளில் தீ விபத்து ஏற்படும்போது சம்பவ இடங்களுக்கு தீயணைப்பு மீட்பு பணிக்கு தீயணைப்பு வாகனங்களை அனுப்பி வைப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இதனால் பல இடங்களில் தீ விபத்தில் பலத்த சேதம் ஏற்பட்டு விடுகிறது. எனவே ஊராட்சி ஒன்றிய தலைநகரமாக உள்ள தா.பழூரில் நவீன வசதிகளுடன் கூடிய தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.


Next Story