ஓமலூர் அருகே வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 4 பேர் பிடிபட்டனர்- ரூ.1 லட்சம் அபராதம்; துப்பாக்கி பறிமுதல்
ஓமலூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 4 பேர் பிடிபட்டனர். அவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்ததுடன், அவர்களிடம் இருந்து துப்பாக்கியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ஓமலூர்:
ஓமலூர் டேனிஸ்பேட்டை வனச்சரகம் சின்னேரிக்காடு பகுதியில் வனவிலங்குகளை மர்ம நபர்கள் வேட்டையாடுவதாக வனசரக அலுவலர் அரசு பரசுராமமூர்த்திக்கு தகவல் வந்தது. உடனே தின்னப்பட்டி வனவர் தலைமையில் வனத்துறையினர் அங்கு ரகசியமாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்கு ஒரு கும்பல் நடமாட்டம் தெரிந்தது. உடனே வனத்துறையினர் அந்த கும்பலை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் சேலம் நகரமலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்த சரவணன் (வயது 36), அதே பகுதியை சேர்ந்த இளங்கோ (31), சேலம் டவுன் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (37), மாட்டுக்காரன் புதூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (37) ஆகியோர் என்பது தெரிய வந்தது. அவர்கள் வனவிலங்குகளை வேட்டையாட முயன்றதும் தெரிய வந்தது. உடனே வனத்துறையினர் சரவணன் உள்பட 4 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சம் அபராதம் வசூலித்ததுடன், அவர்கள் வைத்திருந்த காற்று துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story