போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி: சேலம் சீலநாயக்கன்பட்டியில் கலெக்டர் ஆய்வு
சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக கலெக்டர் கார்மேகம் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
சேலம்:
சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக கலெக்டர் கார்மேகம் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
போக்குவரத்து நெரிசல்
சேலம் மாநகராட்சி பகுதியில் சீலநாயக்கன்பட்டியில் மேம்பாலம் ஒன்று உள்ளது. சேலத்தில் இருந்து ஆத்தூர், திருப்பத்தூர், வேலூர், சென்னை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட ஊர்களுக்கு இந்த பாலம் வழியாக லாரிகள் மற்றும் பிற வாகனங்கள் செல்கின்றன.
இந்த பாலம் உள்ள பைபாஸ் பகுதியில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும். இதுதவிர விபத்துக்களும் அதிகம் ஏற்பட்டு வந்தது. சீலநாயக்கன்பட்டி பைபாஸ் அருகே பல்வேறு ஊர்கள் உள்ளதால் போக்குவரத்து நெரிசலால் இந்த வழியே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.
கலெக்டர் ஆய்வு
இது குறித்து அறிந்த சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேற்று காலை சீலநாயக்கன்பட்டி பைபாஸ் வந்தார். பின்னர் அவர், சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் வேதரத்தினம் மற்றும் உதவி கலெக்டர் விஷ்ணு தர்ஷினி மற்றும் அதிகாரிகளுடன் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
தற்போது உள்ள பாலம் பகுதியில் வேறு என்ன வசதிகள் செய்து தருவது, விபத்துக்களை தடுக்க என்ன செய்வது என மாவட்ட கலெக்டர் கார்மேகம் கேட்டறிந்தார். பல ஆண்டுகளாக சிரமப்பட்டு வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமம் இன்றி சீலநாயக்கன்பட்டி பைபாஸ் வழியே சென்று வர மாவட்ட நிர்வாகம் போர்க்கால அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
Related Tags :
Next Story