சேலத்தில் 60 நடமாடும் வாகனங்கள் மூலம் 26,715 பேருக்கு கொரோனா பரிசோதனை- மாநகராட்சி ஆணையாளர் தகவல்
சேலத்தில் 60 நடமாடும் வாகனங்கள் மூலம் 26,715 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
சேலம்:
சேலத்தில் 60 நடமாடும் வாகனங்கள் மூலம் 26,715 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
நடமாடும் பரிசோதனை வாகனங்கள்
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுத்திடும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. 1,200 களப்பணியாளர்கள் மூலமாக வீடு, வீடாக சென்று குடியிருப்போர் அனைவரின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்வதோடு, சளி மற்றும் காய்ச்சல் போன்ற கொரோனா நோய் அறிகுறி உள்ளதா? என்பதை கண்காணிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் விவரங்களை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தெரிவித்து நடமாடும் பரிசோதனை வாகனங்கள் மூலமாக அறிகுறி உள்ளவர்களின் வீடுகளுக்கே உடனடியாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 60 நடமாடும் வாகனங்கள் மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
26,715 பேருக்கு பரிசோதனை
மாநகராட்சி பகுதிகளில் தற்போது தினமும் சராசரியாக 48 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்களும், சளி தடவல் பரிசோதனை முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனங்கள் மூலமாக இதுவரை 26 ஆயிரத்து 715 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 1,194 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, நேற்று நடமாடும் வாகனங்கள் மூலமாக 2 ஆயிரத்து 748 பேர் உள்பட 3 ஆயிரத்து 516 பேருக்கு சளி தடவல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் இதுவரை 1 லட்சத்து 19 ஆயிரத்து 906 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 18 ஆயிரத்து 779 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது.
ஆணையாளர் ஆய்வு
இந்நிலையில், அம்மாபேட்டை மண்டலம் ஜோதி தியேட்டர் அருகில் நேற்று நடமாடும் வாகனம் மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியை நேற்று மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அருகில் உள்ள கொரோனா பரிசோதனை மையம் அல்லது காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்களுக்கு தாங்களாகவே சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என ஆணையாளர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்
இந்த ஆய்வின்போது மாநகர நல அலுவலர் பார்த்திபன், உதவி ஆணையாளர் சண்முகவடிவேல், உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், சுகாதார அலுவலர் மாணிக்கவாசகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story