பர்கூர் அருகே தம்பதியிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது
பர்கூர் அருகே தம்பதியிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது
பர்கூர்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள சென்மேடு பகுதியை சேர்ந்தவர் தயாநிதி (வயது 35). இவர் கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளியில் குடியிருந்து வருகிறார். சம்பவத்தன்று இவரும், இவருடைய மனைவி மஞ்சுளா (25) ஆகியோர் மொபட்டில் கிருஷ்ணகிரி- சென்னை நெடுஞ்சாலையில் பர்கூர் அருகே ஒப்பதவாடி பகுதியில் சென்றனர். அப்போது மோட்டார்சைக்கிளில் 2 வாலிபர்கள் மொபட்டின் அருகே சென்று தயாநிதி பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்தனர்.
இதனால் மொபட் நிலைதடுமாறியது. இதில் மொபட்டில் பின்னால் அமர்ந்து சென்ற மஞ்சுளா கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து பர்கூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து செல்போன் பறித்து சென்ற திருடர்களை தேடி வந்தார். இந்தநிலையில் பர்கூர் பஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி அவர்களிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில் அவர்கள் திருப்பத்தூர் மாவட்டம் பொன்னேரி மூர்த்தி பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் மவுன பிரகாஷ் (22) என்றும், மற்றொருவர் வாணியம்பாடி அருகே உள்ள சின்ன வேப்பம்பட்டியை சேர்ந்த பிரதாப் (21) என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் தயாநிதியிடம் செல்போன் மற்றும் சிலரிடம் பணப்பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து செல்போன், பணத்தை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story