மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடுகள் ஒதுக்க வேண்டும்


மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடுகள் ஒதுக்க வேண்டும்
x
தினத்தந்தி 17 Jun 2021 5:39 AM IST (Updated: 17 Jun 2021 5:39 AM IST)
t-max-icont-min-icon

பிரகாசபுரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடுகளை ஒதுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி

பிரகாசபுரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடுகளை ஒதுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

வீடுகளை இழந்த மக்கள்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த 2009-ம் ஆண்டு கனமழை பெய்தது. அப்போது உயிரிழப்புகள் ஏற்பட்டதோடு, பலரும் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஊட்டி அருகே பிரகாசபுரத்தில் தற்காலிகமாக வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. அங்கு 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

பின்னர் அதே பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்க 172 வீடுகள் கட்டப்பட்டது. தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் முதற்கட்டமாக 92 பேருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டது. இதற்கான ஆணை வழங்கப்பட்டாலும், சாவிகள் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் தற்காலிக வீடுகளில் வசித்து வருகின்றனர்.

கோரிக்கை மனு

தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் வீடுகளின் தகர மேற்கூரைகள் வழியாக மழைநீர் ஒழுகி வருகிறது. இதனால் கடும் குளிரில் குழந்தைகளுடன் வசிக்க முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

இந்த நிலையில் நேற்று பொதுமக்கள் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் தொடர் மழையால் பாதிக்கப்படுவதால் புதிய வீடுகளை ஒதுக்கி தருமாறு கோரிக்கை மனு அளித்தனர்.

சாவிகளை வழங்க வேண்டும்

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, கடந்த 2009-ம் ஆண்டு கனமழையால் பாதிக்கப்பட்டபோது தற்காலிக வீடுகள் ஒதுக்கப்பட்டது. கடந்த 11 ஆண்டுகளாக அங்கு வசித்து வருகிறோம். இங்கு குழந்தைகள், முதியவர்கள் உள்ளனர். 

தற்போது பலத்த காற்றுடன் மழை பெய்வதால் சுற்றியுள்ள மரங்கள் விழும் அபாயம் உள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு புதிய வீடுகளுக்கான ஆணை வழங்கியும், இதுவரை சாவிகள் வழங்கப்படவில்லை. இதுகுறித்து கலெக்டரிடம் கூறினோம். புதிய வீடுகளை பயன்படுத்துவதற்காக சாவிகளை தருவதாக தெரிவித்தார் என்றனர். மேலும் பல வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளது.


Next Story