மாமியாரின் தொல்லை தாங்காமல் கர்ப்பிணியாக நடித்த இளம்பெண் தற்கொலை


மாமியாரின் தொல்லை தாங்காமல் கர்ப்பிணியாக நடித்த இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 17 Jun 2021 6:54 AM IST (Updated: 17 Jun 2021 6:54 AM IST)
t-max-icont-min-icon

மாமியாரின் தொல்லை தாங்காமல் 6 மாதமாக கர்ப்பிணி போல் நடித்த இளம்பெண், ‘ஸ்கேன்’ பரிசோதனை முடிவில் தனது கணவருக்கு உண்மை தெரிந்து விடுமோ? என்ற பயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கர்ப்பமானதாக பொய்
சென்னையை அடுத்த மாதவரம் மூலக்கடை பெரியார் நகரைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கனிமொழி (வயது 25). இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.திருமணம் ஆன சில மாதங்களிலேயே கனிமொழியின் மாமியார் இன்னும் கர்ப்பமாகவில்லையே என கூறி வந்தார். நாட்கள் செல்ல செல்ல திருமணமாகி இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லையே எனவும், மலடி எனவும் கூறி அடிக்கடி கனிமொழியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாமியாரின் தொல்லை தாங்க முடியாமல் தவித்த கனிமொழி, மாமியாரை சமாளிக்க தான் கர்ப்பமாக இருப்பதாக பொய் 
சொன்னதாக தெரிகிறது. அதையே தனது கணவரிடமும் கூறினார். இதனால் கணவர், மாமியார் இருவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தூக்குப்போட்டு தற்கொலை
கடந்த 6 மாதமாக கனிமொழி கர்ப்பிணியாக நடித்து வந்தார். நேற்று முன்தினம் கனிமொழியை அவருடைய கணவர் ரஞ்சித்குமார், பரிசோதனைக்காக டாக்டரிடம் அழைத்துச் சென்றார். அங்கு ‘ஸ்கேன்’ எடுத்துவிட்டு, வீட்டுக்கு வந்து விட்டனர்.நேற்று ‘ஸ்கேன்’ பரிசோதனை முடிவை வாங்குவதற்காக ரஞ்சித்குமார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். பரிசோதனை முடிவில் தான் கர்ப்பம் இல்லை என்பது கணவருக்கு தெரிந்துவிடுமோ? என பயந்த கனிமொழி, வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஆர்.டி.ஓ. விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்துவந்த மாதவரம் போலீசார், தூக்கில் தொங்கிய கனிமொழி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.மேலும் கனிமொழிக்கு திருமணமாகி 2 வருடங்களே ஆவதால் இதுபற்றி சென்னை தண்டையார்பேட்டை ஆர்.டி.ஓ. விசாரித்து வருகிறார்.

Next Story