மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறில் பாலிடெக்னிக் மாணவர் அடித்துக்கொலை
மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறில் பாலிடெக்னிக் மாணவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 5 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பாலிடெக்னிக் மாணவர்
ஆவடியை அடுத்த அயப்பாக்கம் ராஜம்மாள் நகரை சேர்ந்தவர் பழனி. மாநகர பஸ் டிரைவர். இவருடைய மகன் கணேசன் (வயது 19). இவர், சென்னை தரமணியில் உள்ள சென்டிரல் பாலிடெக்னிக்கில் டிப்ளமோ மெக்கானிக்கல்
என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.இவர், தனது நண்பர்களான அயப்பாக்கத்தை சேர்ந்த ரங்கசாமி, அம்பத்தூர் ஐ.சி.எப். காலனியை சேர்ந்த சக்திவேல் ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு ஆவடி அடுத்த கோனாம்பேடு பகுதியில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரிக்கு அருகே உள்ள காலி மைதானத்தில் மது அருந்தினார்.அப்போது இவர்களிடம் அதே பகுதியைச் சேர்ந்த 5 பேர், ‘எங்கள் ஏரியாவில் வந்து ஏன் மது அருந்துகிறீர்கள்?’ என கேட்டு தகராறு செய்ததுடன், 3 பேரையும் தாக்கினர். இதனால் பயந்துபோன 3 பேரும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர்.
அடித்துக்கொலை
ஆனாலும் போதையில் இருந்த 5 பேரும், இவர்களை விடாமல் மோட்டார்சைக்கிளில் விரட்டி வந்தனர். கோனாம்பேடு பிள்ளையார் கோவில் அருகே வந்தபோது இவர்களது மோட்டார்சைக்கிள் மீது அவர்கள் மோதினர். இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து கணேசன் மற்றும் அவரது நண்பர்கள் கீழே விழுந்தனர்.பின்னர் கணேசனை 5 பேரும் சேர்ந்து சரமாரியாக தாக்கினர். இதில் கணேசன் மயங்கி விழுந்தார். இதையடுத்து 5 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஆவடி போலீசார், கணேசனை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், கணேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து கணேசனின் தந்தை பழனி அளித்த புகாரின்பேரில் ஆவடி போலீசார் கோனாம்பேடு பகுதியை சேர்ந்த யுவராஜ் (27), உமாபதி (23), எஸ்.சந்தோஷ் (23), கே.சந்தோஷ் (24), கார்த்திக் என்ற விஷ்ணு (25) ஆகிய 5 பேரை பிடித்து அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story