மாதவரத்தில் 40 ரூபாய் கடனுக்காக வாலிபர் குத்திக்கொலை; நண்பர் கைது
சென்னையை அடுத்த மாதவரம் உடையார் தோட்டம் முதல் தெருவை சேர்ந்தவர் மணி என்ற மணிகண்டன ்(வயது 25). இவர், மாதவரத்தில் உள்ள தனியார் பட்டறையில் வேலை செய்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்த இவருடைய நண்பர் நாகமுத்து(26). இவர்கள் இருவரும் தங்களது பிற நண்பர்களுடன் சேர்ந்து நேற்று காலை முதல் மாலை வரை மது அருந்தினர். மாலையில் நண்பர்கள் அனைவரும் சென்றுவிட மணிகண்டன்,
நாகமுத்து இருவர் மட்டும் உடையார் தோட்டம் 3-வது தெருவில் அமர்ந்து பேசிகொண்டிருந்தனர்.அப்போது நாகமுத்து, மணிகண்டனிடம் தனக்கு தரவேண்டிய 40 ரூபாய் கடனை திருப்பி கேட்டதாக தெரிகிறது. இதனால் நண்பர்கள் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி, கைகலப்பானது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.இதில் ஆத்திரமடைந்த நாகமுத்து, அங்குள்ள இறைச்சி கடையில் இருந்த கத்தியை எடுத்து வந்து மணிகண்டனை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மாதவரம் போலீசார், கொலையான மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர், மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகமுத்துவை கைது செய்தனர்.
Related Tags :
Next Story