மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை தற்போது திறப்பதற்கான வாய்ப்பு இல்லை: தொல்லியல்துறை


மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை தற்போது திறப்பதற்கான வாய்ப்பு இல்லை: தொல்லியல்துறை
x
தினத்தந்தி 17 Jun 2021 9:37 AM IST (Updated: 17 Jun 2021 9:37 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரத்தில் கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன சின்னங்கள் திறப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

புராதன சின்னங்கள்
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் அதிகரித்து உயிரிழப்புகள் அதிகரித்து வந்ததால் மத்திய சுற்றுலா, கலாசாரத்துறை அமைச்சகம் நாடு முழுவதும் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னங்களை மூட அறிவுறுத்தி இருந்தது.இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்கள் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் கடந்த 2 மாதமாக மூடப்பட்டு பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வருவதால் நேற்று முதல் அந்தந்த மாநில அரசுகளின் ஒப்புதல் பெற்று வழிகாட்டி நெறிமுறைகளுடன் புராதன சின்னங்களை திறக்கலாம் என்று மத்திய தொல்லியல் துறை அறிவித்திருந்தது. இதனால் நேற்று இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள புராதன சின்னங்கள் திறக்கப்பட்டன.

தமிழகத்தில் கொரோனா தொற்று
இதில் தாஜ்மகால் நேற்று திறக்கப்பட்டது. மாமல்லபுரம் கடற்கரை கோவில் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.மேலும் தமிழகத்தில் தற்போதுதான் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதாகவும், 
பொதுப்போக்குவரத்து இன்னும் தொடங்கப்படாததாலும் மாமல்லபுரம் புராதன சின்னங்கள் திறக்கப்படவில்லை என்றும், கொரோனா தொற்று முழுமையாக குறைந்தபிறகே தமிழக அரசின் ஒப்புதலுடன் மாமல்லபுரம் புராதன சின்னங்கள் திறக்கப்படும் என்றும், அதுவரை புராதன சின்னங்கள் திறப்பதற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் மாமல்லபுரம் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.இந்த நிலையில் நேற்று மாமல்லபுரம் புராதன சின்னங்கள் திறக்கப்பட்டு, தங்களுக்கு மீண்டும் வாழ்வாதாரம் கிடைக்கும் என்றும், தங்கள் வாழ்வில் மீண்டும் ஒளிவீசும் என்றும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த சுற்றுலா வழிகாட்டிகள், வியாபாரிகள், விடுதி உரிமையாளர்கள் என சுற்றுலாவை நம்பி வாழ்க்கை நடத்தும் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஏமாற்றம் அடைந்தனர்.சுற்றுலா வழிகாட்டிகள், சிறு வியாபாரிகள் என சுற்றுலாவை நம்பி உள்ளவர்களுக்கு தமழக அரசு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்றும், தங்கும் விடுதிகளுக்கு வரி விதிப்பு மற்றும் மின்கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஒருபுறம் எழுந்துள்ளது.

பொதுமக்கள் வேண்டுகோள்
தமிழக அரசு உடனடியாக மாமல்லபுரம் புராதன சின்னங்களை திறக்க மாமல்லபுரம் தொல்லியல் துறைக்கு ஒப்புதல் வழங்கி சுற்றுலாவை நம்பி உள்ள குடும்பத்தினரின் வாழ்கையில் ஒளியேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நேற்று புராதன சின்னங்கள் திறக்கப்படாததால், பயணிகள் வரத்து இன்றி போதிய வியாபாரம் இருக்காது என்பதால் மாமல்லபுரம் கடற்கரை சாலை, ஐந்துரதம் சாலை, அர்ச்சுனன் தபசு சாலை உள்ளிட்ட இடங்களில் உள்ள பெரும்பாலான கடைகள் திறக்கப்படாமல் மூடியே காணப்பட்டன.முக்கிய சாலைகளும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

Next Story