நாகூர், கீழ்வேளூர் பகுதியில் மதுபாட்டில்கள்- சாராயம் கடத்தல்; 14 பேர் கைது


நாகூர், கீழ்வேளூர் பகுதியில் மதுபாட்டில்கள்- சாராயம் கடத்தல்; 14 பேர் கைது
x
தினத்தந்தி 17 Jun 2021 4:18 PM IST (Updated: 17 Jun 2021 4:18 PM IST)
t-max-icont-min-icon

நாகூர், கீழ்வேளூர் பகுதிகளில் மதுபாட்டில்கள், சாராயம் கடத்தியதாக 14 பேர் கைது செய்யப்பட்டனர். 11 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாகூர்,

நாகை மாவட்ட பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. ஆனால் நாகை அருகே உள்ள புதுச்சேரி மாநில பகுதியான காரைக்கால் மாவட்டம் கீழவாஞ்சூர் பகுதியில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு விட்டன.

அங்கிருந்து நாகை மாவட்ட பகுதிக்கு சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதை தடுக்கும் வகையில் நாகூர் அருகே உள்ள மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று காரைக்காலில் இருந்து மேலவாஞ்சூர் சோதனை சாவடி வழியாக நாகை நோக்கி 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேரை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிள்களில் மதுகடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் தலைஞாயிறு திருமாளம் தெருவை சேர்ந்த ஆனந்தராஜ் (வயது32), கீழ்வேளூர் சித்தாம்பூர் கீழத்தெருவை சேர்ந்த நாகூரான் (50), கார்த்தி (28), கீழ்வேளூர் மேலகாவலகுடியை சேர்ந்த துரைசாமி (55), திருவாரூர் விளமல் வடக்கு தெருவை சேர்ந்த கிரிகரன் (28) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இவர்களிடம் இருந்து 105 மதுபாட்டில்கள், அவற்றை கடத்துவதற்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜ், நாகூரான், கார்த்தி, துரைசாமி, கிரிகரன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

கீழ்வேளூர் அருகே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் கருணாவெளி - ஓர்குடி மெயின் சாலை, கீழ்வேளூர் கடைவீதி, கானூர் சோதனை சாவடி உள்ளிட்ட இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரைக்கால் மாவட்டம் வாஞ்சூர் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிள்களில் சாராயம் கடத்தி வந்த கீழ்வேளூர் கருணா வெளியை சேர்ந்த விஜயராகவன் (25), அவருடைய தம்பி கிருஷ்ணராஜ் (20), நீடாமங்கலம் புதுதேவன்குடியை சேர்ந்த விக்னேஷ் (29), அடியக்கமங்கலத்தை சேர்ந்த ஜோதிபாசு (45), மன்னார்குடியை சேர்ந்த தினேஷ் (23), எடையூரை சேர்ந்த ராம்கி (31), கானூரை சேர்ந்த தனபால் (28) கோட்டூர் புழுதிக்குடியை சேர்ந்த மாதவன் (32), கீழ்வேளூரை சேர்ந்த சிவனேசன் (33) ஆகிய 9 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 180 லிட்டர் சாராயம் மற்றும் 8 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

Next Story