காங்கேயநல்லூரில் இருந்து ரங்காபுரம் வரை பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க ஆயத்த பணிகள் தொடக்கம்
காங்கேயநல்லூரில் இருந்து ரங்காபுரம் வரை பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைப்பதற்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. வருவாய், மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
வேலூர்
பாலாற்றின் குறுக்கே மேம்பாலம்
வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. ஆனால் அதற்கேற்ப சாலை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை.
மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.122 கோடி மதிப்பில் 217 சாலைப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகளை தொடங்குவதற்கான நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
இந்த திட்டங்களில் காங்கேயநல்லூரில் இருந்து ரங்காபுரம் பகுதியை இணைக்கும் வகையில் பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைப்பது முக்கியமான திட்டமாக கருதப்படுகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆயத்தபணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆயத்தபணிகளுக்காக ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதிகாரிகள் ஆய்வு
காங்கேயநல்லூர்-ரங்காபுரம் வரை சாலை அமைப்பது தொடர்பாக நிலம் அளவீடு பணி நேற்று நடந்தது. வேலூர் தாசில்தார் ரமேஷ் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நிலம் அளவீடு செய்யப்பட்டு, கல்நடும் பணி நடந்தது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், காங்கேயநல்லூர்- ரங்காபுரம் வரை பாலாற்றில் மேம்பாலம் அமைகிறது. சாலையும் அமைக்கப்பட இருக்கிறது. இது தொடர்பாக நிலம் அளவீடு செய்யப்படுகிறது. நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க ரூ.22 கோடியே 53 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆயத்தபணிகள் முடிவடைந்த பின்னர் இழப்பீடு வழங்கப்படும். அதைத்தொடர்ந்து சாலை அமைப்பதற்கான மொத்த செலவு குறித்து கணக்கீடு செய்யப்பட்டு, நிதி ஒதுக்கப்படும். பின்னர் சாலைஅமைக்கும் பணிகள் நடைபெறும் என்றனர்.
Related Tags :
Next Story