தஞ்சையில் பள்ளிக்கூடங்களுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்
தஞ்சையில் பள்ளிக்கூடங்களுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர்,
தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் பள்ளிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டது. அதன் பின்னர் தொற்று குறைய தொடங்கியதிலிருந்து 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பாடங்கள் நடத்தப்பட்டன. பின்னர் அந்த வகுப்புகளும் ரத்து செய்யப்பட்டன.
அதன் பின்னர் இன்றுவரை இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டன. இதுபோல் இதனை வகுப்புகளுக்கான தேர்வுகளும் நடத்தப் படவில்லை.
பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டதால் 11-ம் வகுப்புக்கான சேர்க்கை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல் இதர வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தொற்று அதிகம் பாதித்த மாவட்டங்களில் ஒன்றான தஞ்சை மாவட்டத்தில் பதினொன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி சேர்க்கை நடைபெறவில்லை. பள்ளிகளில் சேருவதற்காக வந்திருந்த ஒரு சில மாணவ- மாணவிகளும் சேர்க்கை நடத்தப்படாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதைபோல் இதர வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு வழங்குவதற்கான புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி தஞ்சை மேம்பாலம் அருகே உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள புத்தக சேமிப்பு குடோனில் இருந்து லாரிகள் மூலம் தஞ்சை கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கான புத்தகங்கள் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன. ஒரு நாளைக்கு 10 பள்ளிகள் வீதம் புத்தகங்கள் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன. தமிழ் மற்றும் ஆங்கில வழி புத்தகங்கள் என தனித்தனியாக பிரித்து அனுப்பப்பட்டு வருகிறது. இந்த புத்தகங்கள் அனைத்தும் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு விடும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Related Tags :
Next Story