முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து போலீஸ்காரர் உள்பட 3 பேர் கைது
முன்விரோதத்தில் வாலிபரை கத்தியால் குத்திய வழக்கில் போலீஸ்காரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் அருகே உள்ள கோகிலாபுரத்தை சேர்ந்தவர் ஜெகன் (வயது 27). இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஆயுதப்படை போலீசாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பார்த்திபனுக்கும் (21) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பட்டாசு வெடிக்கும் போது தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை அங்குள்ள ஊராட்சி அலுவலகம் அருகில் 2 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்தனர்.
இந்த நிலையில் பார்த்திபன் தம்பி கபிலேஷ் (19) மோட்டார் சைக்கிளில் கோகிலாபுரம் அருகே உள்ள ஆனைமலையன்பட்டிக்கு சென்றார். அப்போது போலீஸ்காரர் ஜெகன், அவரது அண்ணன் சுரேஷ், உறவினர் பாண்டியன்(43) ஆகியோர் சேர்ந்து கபிலேஷை தாக்கி மோட்டார்சைக்கிளை சேதப்படுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பார்த்திபன் சம்பவ இடத்திற்கு சென்றார். அப்போது அவரையும் தாக்கி கத்தியால் குத்தினார்கள். இதையடுத்து காயம் அடைந்த பார்த்திபன் தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து உத்தமபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ்காரர் ஜெகன், சுரேஷ், பாண்டியன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நேற்று அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதேபோல் சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் பார்த்திபன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story