ஆப்பிரிக்க நத்தைகள் சேதப்படுத்திய கீரை தோட்டங்களில் அதிகாரிகள் ஆய்வு


ஆப்பிரிக்க நத்தைகள் சேதப்படுத்திய கீரை தோட்டங்களில் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 17 Jun 2021 9:53 PM IST (Updated: 17 Jun 2021 9:53 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக திண்டுக்கல்லில் ஆப்பிரிக்க நத்தைகள் சேதப்படுத்திய கீரை தோட்டங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திண்டுக்கல்: 

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி
திண்டுக்கல் முத்தழகுபட்டி, சின்னாளப்பட்டி பகுதிகளில் அகத்தி, மிளகு தக்காளி, பொன்னாங்கன்னி உள்பட 15 வகையான கீரைகள் பயிரிடப்படுகின்றன. 

இங்கு சாகுபடி செய்யப்படும் கீரைகள் திண்டுக்கல் மட்டுமின்றி பிற மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்மூலம் ஓரளவு வருமானம் கிடைப்பதால் கீரை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் முத்தழகுபட்டி, சின்னாளப்பட்டி பகுதிகளில் கீரை தோட்டங்களுக்கு ராட்சத ஆப்பிரிக்க நத்தைகள் படையெடுக்கின்றன. இலை, தண்டு என அனைத்து பகுதிகளையும் நத்தைகள் தின்பதால் கீரை செடிகள் நாசமாகி வருகின்றன. இதனால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதுதொடர்பான செய்தி ‘தினத்தந்தி’ நாளிதழில் நேற்று வெளியானது.

அதிகாரிகள் ஆய்வு 
இதை தொடர்ந்து தோட்டக்கலை உதவி இயக்குனர் அலெக்ஸ் ஐசக், வேளாண்மை உதவி இயக்குனர் நாகேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று திண்டுக்கல் முத்தழகுபட்டிக்கு வந்தனர். 

பின்னர் ஆப்பிரிக்க நத்தைகளால் பாதிக்கப்பட்ட கீரை தோட்டங்களை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் ஆப்பிரிக்க நத்தைகளை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.

இதுதொடர்பாக உதவி இயக்குனர் அலெக்ஸ் ஐசக் கூறுகையில், ஆப்பிரிக்க நத்தைகள் 19 செ.மீ. வளரக்கூடியது. இவை 3 முதல் 5 ஆண்டுகள் வரை வாழும். மழைக்காலங்களில் அதிகமாக பயிர்களை தாக்கும். 

மேலும் இரவில் பயிர்களின் இலைகள், தண்டுகள், வேர்கள், பழங்கள், பூக்களை சேதப்படுத்தும். இளம் நாற்றுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். பப்பாளி, கத்தரி, பீன்ஸ், வெண்டை, காபி, கீரைகள் மற்றும் மலை காய்கறி பயிர்களை தின்று சேதப்படுத்தும்.

கட்டுப்படுத்தும் முறை 
இந்த நத்தைகள் தொடக்கத்தில் நிலத்தில் மறைவிடங்களை கண்டுபிடித்து ஒளிந்து இருக்கும். எனவே, அவற்றை கண்டுபிடித்து சுடுதண்ணீர் அல்லது உப்புநீரில் போட்டு அழிக்கலாம். ஈரமான சாக்குப்பைகள், பப்பாளி இலை, தண்டுகளை வரப்பு ஓரத்தில் போட்டு வைத்தால் நத்தைகளை ஈர்த்து விடலாம்.


மேலும் சாமந்திப்பூ செடிகளை வயல்களை சுற்றி வளர்க்கலாம். சுண்ணாம்பு, பிளீச்சிங் பவுடரை நத்தைகளால் பாதிக்கப்பட்ட இடங்களில் தூவ வேண்டும். நத்தைகளின் பாதைகளை மறைக்க அரிசி தவிடு, மெட்டால் டிஹைட் ஆகியவற்றின் கலவையை பயிர்களை சுற்றி தெளித்து கட்டுப்படுத்தலாம், என்றார்.

Next Story