திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி பணிகள் 6 மாதத்தில் முடிவடையும்; அதிகாரி தகவல்
திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி பணிகள் 6 மாதத்தில் முடிவடையும் என்று மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அதிகாரி பிரகாஷ் கூறினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் நகர பஞ்சாயத்து பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள திட்டப்பணிகள் குறித்து உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆய்வு கூட்டம் நடந்தது. தூத்துக்குடி மாவட்ட கொரோனா தொற்று தடுப்பு- திட்டப்பணிகள் சிறப்பு கண்காணிப்பு அதிகாரி பிரகாஷ் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து சிறப்பு கண்காணிப்பு அதிகாரி பிரகாஷ், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் ரூ.29.16 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பக்தர்கள் தங்கும் விடுதி பணிகளை பார்வையிட்டார். மேலும் பாதாள சாக்கடை திட்டத்தில் ஆலந்தலை பகுதியில் தண்ணீரை தேக்கி வைக்கும் இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பாதாள சாக்கடை திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் பார்வையிட்டார். அதன்பிறகு சிறப்பு கண்காணிப்பு அதிகாரி பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை மேலும் குறைப்பதற்கு போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. கொரோனா 3-வது அலை ஏற்பட்டாலும் அதை சமாளிப்பதற்கு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு ஆய்வு பணிகள் நடக்கிறது.
கோவில் நகரமான திருச்செந்தூரில் இன்று (நேற்று) ஆய்வு செய்தோம். திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் 150 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய வார்டு தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. திருச்செந்தூர் நகரில் பாதாள சாக்கடை திட்டத்தில் 5 ஆயிரம் இணைப்புகள் கொடுப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகரில் 10 ஆயிரம் குடியிருப்புகள் இருந்தாலும், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ள பகுதியில் இன்னும் 3 மாத காலத்திற்குள் இணைப்புகள் கொடுப்பதற்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் திருச்செந்தூர் பாதாள சாக்கடை திட்டத்தில் கழிவுநீரை சுத்திகரித்து 40 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அந்த தண்ணீர் ஆலந்தலை பகுதியில் திருச்செந்தூர் நகர பஞ்சாயத்துக்கு சொந்தமான 85 ஏக்கர் நிலத்தில் 15 ஏக்கரில் நீர் தேக்கம் ஏற்படுத்தி நீரை சேமிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மழை நீரையும் சேமிக்க முடியும். அதில் வனப்பகுதி ஏற்படுத்தி பாதுகாக்கப்படும். மேலும் திருச்செந்தூர், ஆறுமுகநேரி பகுதியில் இருந்து குப்பைகள் 25 டன் அளவிற்கு கொண்டுவரப்பட்டு அதனை நவீனப்படுத்தி அறிவியல் ரீதியாக கையாள முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் கட்டப்பட்டு வரும் பக்தர்கள் தங்கும் விடுதி பணிகள் 6 மாத காலத்தில் முடிக்கப்படும். அழகான கட்டிடமாக காட்சியளிப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. திருச்செந்தூருக்கு பல்வேறு ஊர்களில் இருந்தும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு தேவையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், நீர் ஆதாரத்தை பெருக்கவும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் நகர பஞ்சாயத்து அதிகாரிகளை கொண்டு திட்ட மதிப்பீடு தயார் செய்து செயல்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 45 ஆண்டுகளுக்கு தேவையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
திருச்செந்தூருக்கு வரக்கூடிய கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மார்க்க சாலைகளில் திருச்செந்தூர் வெளிப்பகுதியில் பக்தர்கள் எளிதாக தங்கி செல்லும் வகையில் கழிப்பறை, குளியலறைகளுடன் கூடிய நவீன பக்தர்கள் தங்கும் விடுதி போன்ற கட்டிடங்கள் கட்ட திட்டம் தயார் செய்ய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கோவில் வளாகத்தில் கூட்ட நெரிசலை சமாளிக்க முடியும். நகரமே புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வில், உதவி கலெக்டர் (பயிற்சி) ஸ்ருத்தஞ் ஜெய் நாராயணன், உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங், கன்னியாகுமரி - சென்னை தொழில் வழிச்சாலை நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன், திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோகிலா, தாசில்தார் முருகேசன், தொழில் வழிச்சாலை கோட்ட என்ஜினீயர் கீதா, குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் மணிமோகன், நிர்வாக பொறியாளர்கள் லதா, செந்தூர்பாண்டி, விஸ்வநாதன், திருச்செந்தூர் கோவில் உதவி ஆணையர் செல்வராஜ், உதவி செயற்பொறியாளர் முருகன், உதவி பொறியாளர் சந்தாணகிருஷ்ணன், நகர பஞ்சாயத்துக்கள் உதவி இயக்குனர் சேதுராமன், உதவி செயற்பொறியாளர் வாசுதேவன், திருச்செந்தூர் நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி ஆனந்தன், மண்டல துணை தாசில்தார் பாலசுந்தரம், வருவாய் ஆய்வாளர் மணிகண்டவேல், கிராம நிர்வாக அலுவலர் செல்வலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story