முன்னுரிமை அடிப்படையில் பழங்குடியின மக்களுக்கு 7,500 தடுப்பூசி ஒதுக்கீடு


முன்னுரிமை அடிப்படையில் பழங்குடியின மக்களுக்கு 7,500 தடுப்பூசி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 17 Jun 2021 10:33 PM IST (Updated: 17 Jun 2021 10:33 PM IST)
t-max-icont-min-icon

முன்னுரிமை அடிப்படையில் நீலகிரியில் பழங்குடியின மக்களுக்கு செலுத்த 7,500 கொரோனா தடுப்பூசி ஒதுக்கப்பட்டு உள்ளது என்று அதிகாரி தெரிவித்தார்.

ஊட்டி

முன்னுரிமை அடிப்படையில் நீலகிரியில் பழங்குடியின மக்களுக்கு செலுத்த 7,500 கொரோனா தடுப்பூசி ஒதுக்கப்பட்டு உள்ளது என்று அதிகாரி தெரிவித்தார்.

பழங்குடியின மக்கள்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஆரம்பத்தில் பழங்குடியின மக்கள் தடுப்பூசி செலுத்த தயக்கம் காட்டினர். பின்னர் தன்னார்வலர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து தோட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலைகள் மற்றும் தேயிலை தோட்டங்களுக்கு சென்று வந்ததால் தொற்று பரவி வந்தது. இதையடுத்து 18 வயதுக்கு மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

நீலகிரியில் பழங்குடியின மக்கள் அனைவருக்கும் இந்த மாத இறுதிக்குள் தடுப்பூசி செலுத்த செயல்திட்டம் வகுக்கப்பட்டு இருக்கிறது. இதை தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. 

ஊட்டி சுற்றுப்புற பகுதிகளில் சுகாதார குழுவினர் முகாமிட்டு பழங்குடியின மக்கள், தோட்ட தொழிலாளர்களுக்கு நடமாடும் வாகனங்கள் மூலம் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். 

டிரைவர்கள்

இந்த நிலையில் நேற்று ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாடகை வாகன டிரைவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பின்னர் 300-க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டாலும் நீலகிரிக்கு ஒதுக்கப்படும் போது, விரைந்து முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

2  லட்சம் பேருக்கு தடுப்பூசி

இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி கூறுகையில், நீலகிரிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு 18,000 கொரோனா தடுப்பூசி வந்தது. சில அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 6 ஆயிரத்து 200 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

முன்னுரிமை அளித்து பழங்குடியின மக்களுக்கு செலுத்த 7,500 கொரோனா தடுப்பூசி ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் தோட்ட தொழிலாளர்கள், வாகன ஓட்டுனர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 2 லட்சத்து 18 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்றார்.

Next Story