பேரணாம்பட்டு அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய 3 பேருக்கு அபராதம்


பேரணாம்பட்டு அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய 3 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 17 Jun 2021 11:03 PM IST (Updated: 17 Jun 2021 11:03 PM IST)
t-max-icont-min-icon

பேரணாம்பட்டு அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய 3 பேருக்கு அபராதம்

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு வனச்சரகம் பல்லலகுப்பம் விரிவு காப்புக்காட்டில் வன விலங்குகளை வேட்டையாடும் ஒரு கும்பல் காட்டுப்பன்றியை வேட்டையாடி இறைச்சியை பங்குப் போட்டு விற்க முயற்சி செய்வதாக பேரணாம்பட்டு வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் பேரணாம்பட்டு வனச் சரகர் சங்கரய்யா தலைமையில் வனவர்கள் ஹரி, மோகனவேல், தயாளன், வனக் காப்பாளர்கள் விஸ்வநாதன், காந்தகுமார், ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வனப்பகுதியில் பதுங்கியிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள், வன விலங்குகளை வேட்டையாடும் கும்பல் என்றும், பல்லலகுப்பம் விரிவு காப்புக்காட்டில் காட்டுப்பன்றி உள்பட பல்வேறு வன விலங்குகளை சுருக்கு கம்பி வலை வைத்து வேட்டையாடியதாகக் கூறினர். அவர்கள் வைத்த வலையில் ஒரு ஆண் காட்டுப்பன்றி சிக்கி உயிரிழந்தது.

அந்தக் காட்டுப்பன்றியை பனை ஒலையால் தீயிட்டு சுட்டு, அதைக் கழுவி இறைச்சியை பங்குப் போட்டு விற்க முயன்றது தெரிந்தது. இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து அரிவாள்கள், காட்டுப்பன்றி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 
காட்டுப்பன்றியை வேட்டையாடிய பல்லல குப்பம் கிராமத்தைச் சேர்ந்த தரணி (வயது 36), ரமேஷ் (33), தட்சணாமூர்த்தி என்ற பட்டன் (30) ஆகியோரை கைது செய்தனர். மாவட்ட வன அதிகாரி பார்கவ தேஜா உத்தரவின் பேரில் 3 பேருக்கு தலா ரூ.8 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.24 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story