திருச்சி பெட்டவாய்த்தலை அருகே ரூ.2 கோடி கொள்ளை வழக்கில் 3 மாதமாக தேடப்பட்டு வந்தவர் கைது
திருச்சி பெட்டவாய்த்தலை அருகே ரூ.2 கோடி கொள்ளை வழக்கில் 3 மாதமாக தேடப்பட்டு வந்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜீயபுரம்,
திருச்சி- கரூர் பைபாஸ்ரோட்டில் பெட்டவாய்த்தலை சோதனைச் சாவடி அருகே கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி இரவு காரில் வந்த சிலர் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு தகராறில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சோதனை சாவடியில் பணியில் இருந்த போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தனர்.
அப்போது அங்கு நின்ற காரில் 4 பேர் இருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது மற்றொரு காரில் வந்த ஒரு கும்பல் திடீரென தகராறு செய்து கொண்டதாகவும், தாங்கள் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்ததாகவும், போலீசார் வருவதை கண்டதும் அந்த கும்பல் காரில் தப்பிச்சென்றதாகவும் தெரிவித்தனர்.
ஆனால் அவர்கள் காரின் அருகே முட்புதரில் ஒரு சாக்கு மூட்டை இருந்ததை போலீசார் கண்டனர். உடனே அந்த மூட்டையை கைப்பற்றிய போலீஸார் அதைப் பிரித்து பார்த்தனர். அதில் கட்டு கட்டாக ரூ.1 கோடி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சட்டமன்றத்தேர்தலில் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக அந்த பணத்தை கடத்தி வந்திருக்கலாம் என சந்தேகம் அடைந்தனர்.
உடனடியாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அங்கு வந்து காரில் வந்த 4 பேரையும், பணத்தையும் கைப்பற்றி ஸ்ரீரங்கம் தாலுக்கா அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர்.
அப்போது அந்த கார் முசிறியை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. செல்வராசு மகன் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.
காரில் 3 சாக்கு மூட்டைகளில் ரூ.3 கோடி பணம் கொண்டு வரப்பட்டதாகவும், பெட்டவாய்த்தலை அருகே ஒரு கும்பல் அந்த காரை வழிமறித்து ரூ.2 கோடியை கொள்ளையடித்துச் சென்று விட்டதாகவும் தெரியவந்தது. மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் திருச்சி கே.கே.நகரில் வசித்து வந்த ரவுடி சாமிரவி தலைமையிலான கும்பல் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து சாமிரவி மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு மாவட்டங்களிலும் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். இதில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ராஜ்குமார், பிரகாஷ், சதீஷ்குமார், சிவா என்கிற குணசேகரன், சுரேஷ், மணிகண்டன் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
முக்கிய குற்றவாளியான சாமிரவியை தீவிரமாக தேடி வந்தனர்.கடந்த சில வருடங்களாக அவர் திருச்சியை விட்டு வெளியேறி பல்வேறு மாவட்டங்களில் தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பதுங்கியிருந்த சாமிரவியை நேற்று அதிகாலை கைது செய்து திருச்சிக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரை ரகசிய இடத்தில் வைத்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் குறித்து தீவிர விசாரணைநடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story