புகளூர் வாய்க்காலில் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
புகளூர் வாய்க்காலில் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நொய்யல்
புகளூர் வாய்க்கால்
ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே காரணாம்பாளையத்தில் உள்ள காவிரி ஆற்றில் தடுப்பணையில் இருந்து புகளூர் வாய்க்கால் பிரிகிறது. புகளூர் வாய்க்கால் நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் அருகே கரூர் மாவட்டத்தில் நுழைகிறது. பின்னர் மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், கோம்புபாளையம், திருக்காடுதுறை ,பாலத்துறை, தோட்டக்குறிச்சி ,தளவாபாளையம், கடம்பன்குறிச்சி ,என் .புதூர் ,செவ்வந்தி பாளையம், நன்னியூர் வரை சென்று வாங்கல் வாய்க்காலில் கலக்கிறது.
தூர்வாரும் பணி
புகளூர் வாய்க்காலில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 11 மாதங்களுக்கு பாசனத்திற்கு காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இந்த வாய்க்காலின் தண்ணீர் மூலம் விவசாயிகள் வாழை, வெற்றிலை, கரும்பு, நெல், மஞ்சள், மரவள்ளி கிழங்கு, கோரை உள்ளிட்ட பல்வேறு பணப் பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில் மே மாதத்தில் வாய்க்காலில் தண்ணீர் திறப்பை நிறுத்தப்பட்டு வாய்க்கால் தூர்வாருவது வழக்கம் .அதன்படி கடந்த மே மாதம் புகளூர் வாய்க்கால் தூர்வாரும் பணிக்காக தண்ணீர் நிறுத்தப்பட்டு தூர்வாரும் பணி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விவசாயிகள் கோரிக்கை
இந்தநிலையில் கடந்த 12-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட்டுள்ளார். இதில், புகளூர் வாய்க்காலில் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதால் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது .அதனால் வாய்க்காலில் தண்ணீர் வருவது மேலும் தாமதமாகும் நிலை உள்ளது. இதனால் பயிர்களுக்கு தண்ணீர்விட முடியாமல் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தூர்வாரும் பணியை துரிதப்படுத்தி விரைவில் புகளூர் வாய்க்காலில் தண்ணீரை திறந்து விட வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story