தாசில்தார் வாகனம்- லாரி மோதல்; கிராம உதவியாளர் உடல் நசுங்கி பலி


தாசில்தார் வாகனம்- லாரி மோதல்;  கிராம உதவியாளர் உடல் நசுங்கி பலி
x
தினத்தந்தி 18 Jun 2021 12:21 AM IST (Updated: 18 Jun 2021 12:21 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டை அருகே தாசில்தார் வாகனமும், லாரியும் மோதிய விபத்தில் கிராம உதவியாளர் உடல் நசுங்கி பலியானார்.

அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே தாசில்தார் வாகனமும், லாரியும் மோதிய விபத்தில் கிராம உதவியாளர் உடல் நசுங்கி பலியானார்.
தாசில்தார் வாகனம்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாசில்தாராக பணிபுரிந்து வருபவர் ரவிச்சந்திரன். விருதுநகரில் வசிக்கும் இவர் தினமும் அருப்புக்கோட்டைக்கு அரசு வாகனத்தில் வந்து செல்வது வழக்கம். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நேற்று முன் தினம் இரவு அருப்புக்கோட்டையில் ரோந்து பணிகளை முடித்துவிட்டு அரசு வாகனத்தில் தாசில்தார் ரவிச்சந்திரன் விருதுநகர் சென்றார். 
அவரது வாகனத்தை சின்ன புளியம்பட்டி கிராம உதவியாளர் சுகுமாரன் ஓட்டிச் சென்றார். அவருடன் மருதுபாண்டியன் என்ற மற்றொரு டிரைவரும் பயணித்துள்ளார்.
மோதல்
தாசில்தார் ரவிச்சந்திரனை அவரது வீட்டில் இறக்கி விட்டு மீண்டும் அருப்புக்கோட்டைக்கு சுகுமாரனும், மருதுபாண்டியனும் அதே வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். பாலவநத்தம் அருகே ஆவின் பாலகம் எதிரே வந்தபோது திடீரென தாசில்தாரின் வாகனமும், எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.. 
இந்த விபத்தில் தாசில்தாரின் வாகனம் லாரிக்கு அடியில் சிக்கி நொறுங்கியது. இதில் கிராம நிர்வாக உதவியாளர் சுகுமாரன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். உடன்வந்த மருதுபாண்டியன் படுகாயம் அடைந்தார்.
மீட்பு
விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தாலுகா போலீசார் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மருது பாண்டியனை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 
இந்த விபத்து குறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story