அரசின் விதிமுறைகளை முறையாக கடைபிடித்தால் கொரோனா பாதிப்பு விரைவில் குறையும் புதிய கலெக்டராக பொறுப்பேற்ற ஸ்ரேயா சிங் பேட்டி
அரசின் விதிமுறைகளை முறையாக கடைபிடித்தால் கொரோனா பாதிப்பு விரைவில் குறையும் புதிய கலெக்டராக பொறுப்பேற்ற ஸ்ரேயா சிங் பேட்டி
நாமக்கல்:
அரசின் விதிமுறைகளை முறையாக கடைபிடித்தால் கொரோனா பாதிப்பு விரைவில் குறையும் என்று புதிய கலெக்டராக பொறுப்பேற்ற ஸ்ரேயா சிங் கூறினார்.
கலெக்டர் பொறுப்பேற்பு
நாமக்கல் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்தவர் மெகராஜ். இவர் சமீபத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் இணை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக புதிய கலெக்டராக விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டராக பணியாற்றி வந்த ஸ்ரேயா சிங் நியமிக்கப்பட்டார். இவர் நேற்று நாமக்கல் வந்து பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு கலெக்டர் அலுவலக பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் இன்னும் 11 மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதில் நாமக்கல் மாவட்டமும் ஒன்று. அடுத்த 2 மற்றும் 3 வாரங்கள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைக்க முன்னுரிமை வழங்கப்படும்.
கொரோனா பாதிப்பு குறையும்
கொரோனா இன்னும் ஒழிந்து போகாத காரணத்தால் நாம் அனைவரும் பாதுகாப்பாக பணியாற்றிட வேண்டும். முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற அரசின் விதிமுறைகளை அனைவரும் முறையாக பின்பற்ற வேண்டும். அவ்வாறு கடைபிடித்தால் கொேரானா பாதிப்பு விரைவில் குறையும். கொரோனா உயிரிழப்பு இல்லை என்கிற நிலையை உருவாக்க முடியும். இன்னொரு அலை வராமலும் தடுக்க முடியும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
தமிழக முதல்-அமைச்சர், பொதுமக்கள் அனைவருக்கும் எல்லாம் கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். அதன்படி தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் கிடைக்க பாடுபடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
கேரளாவை சேர்ந்தவர்
புதிய கலெக்டர் ஸ்ரேயா சிங்கின் சொந்த ஊர் கேரள மாநிலம் திருச்சூர் ஆகும். பி.டெக். பட்டதாரியான இவர் கடந்த 2009 முதல் 2010-ம் ஆண்டு வரை மைசூருவில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து உள்ளார். 2012-ல் ஐ.பி.எஸ். மற்றும் 2013-ல் ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்று உள்ளார்.
அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் பயிற்சி கலெக்டராகவும், பத்மநாபபுரத்தில் உதவி கலெக்டராகவும் பணியாற்றி உள்ளார். மேலும் தமிழக அரசின் உள்துறையில் துணை செயலாளர், திருநெல்வேலி மாவட்டத்தில் ஒழுங்குமுறை ஆணையர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நாமக்கல் மாவட்டத்தின் 3-வது பெண் கலெக்டர் ஆவார்.
Related Tags :
Next Story