சோலையார் அணையின் நீர்மட்டம் 80 அடியை தாண்டியது


சோலையார் அணையின் நீர்மட்டம் 80 அடியை தாண்டியது
x
தினத்தந்தி 18 Jun 2021 12:39 AM IST (Updated: 18 Jun 2021 12:39 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் 6-வது நாளாக பெய்து வரும் கனமழை காரணமாக சோலையார் அணையின் நீர்மட்டம் 80 அடியை தாண்டி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5,408 கனஅடி தண்ணீர் வருகிறது.

வால்பாறை

வால்பாறையில் 6-வது நாளாக பெய்து வரும் கனமழை காரணமாக சோலையார் அணையின் நீர்மட்டம் 80 அடியை தாண்டி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5,408 கனஅடி தண்ணீர் வருகிறது. 

6-வது நாளாக கனமழை 

கோவை மாவட்டம் வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது.6-வது நாளாக கனமழை பெய்தது. இந்த மழையுடன் சேர்ந்து பலத்த காற்றும் வீசி வருகிறது. 

அதுபோன்று எஸ்டேட் பகுதி, வனப்பகுதியிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகள், நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. 

சின்னக்கல்லார் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக சின்னக்கல்லார் அணையின் சுரங்கக் கால்வாய் வழியாக 2,508 கனஅடியும், நீரார் அணையில் இருந்து 219 கனஅடி தண்ணீரும் சோலையார் அணைக்கு திறந்து விடப்பட்டு உள்ளது. 

80 அடியை தாண்டியது 

அதுபோன்று இங்குள்ள எஸ்டேட் பகுதியில் பெய்யும் கனமழையால் கருமலை ஆறு, சோலையார் ஆறு உள்பட பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. 

குறிப்பாக சோலையார் ஆற்றில் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் பொங்கி  செல்கிறது. இதனால் இந்த ஆற்றில் உள்ள பிர்லா நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. 

கனமழை காரணமாக சோலையார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் 160 அடி கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் 80 அடியை தாண்டி உள்ளது. 

அணைக்கு வினாடிக்கு 5,408 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து பரம்பிக்குளம் அணைக்கு 422 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

ஆலோசனை கூட்டம் 

இந்த கனமழை காரணமாக வால்பாறை வட்டார பகுதி முழுவதும் கடுமையான குளிர் நிலவுகிறது. மேலும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும்  பாதிக்கப்பட்டு உள்ளது.

 இந்த நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தாசில்தார் ராஜா தலைமையில் பேரிடர் மீட்பு அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. 

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிவாரண முகாமும் அமைக்கப்பட்டு உள்ளது. 

 மழை காலங்களில் ஆபத்தை ஏற்படுத்தும் வாழைத்தோட்டம் ஆற்று பகுதியை தொடர்ந்து கண்காணிக்கவும், மின் வாரியம் மூலம் மின்தடையை உடனுக்குடன் சரிசெய்ய சிறப்பு குழு அமைக்கவும், சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க நெடுஞ்சாலை துறைக்கு அறிவுரை வழங்கப் பட்டது. 

மழையளவு 

வால்பாறை பகுதியில் பெய்த மழையளவு (மி.மீட்டர்) விவரம் வருமாறு:-
சோலையார் அணை 92 மி.மீ., வால்பாறை 78, மேல்நீராறு 102, கீழ் நீராறு 77 மி.மீ. ஆகும். அதிகபட்சமாக மேல்நீராறு பகுதியில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story