கூட்டுறவு வங்கி மூலம் விவசாயிகளுக்கு ரூ.11,500 கோடி கடன் வழங்க இலக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்


கூட்டுறவு வங்கி மூலம் விவசாயிகளுக்கு ரூ.11,500 கோடி கடன் வழங்க இலக்கு  அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
x
தினத்தந்தி 18 Jun 2021 1:22 AM IST (Updated: 18 Jun 2021 1:22 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.11,500 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

நெல்லை:
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.11,500 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

ஆய்வு கூட்டம்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டம், நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை தாங்கினார்.

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தற்போதுள்ள சூழ்நிலையில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும் பல்வேறு வகையான கடன்கள் குறித்தும், விவசாய தேவைக்கான உரம், இடுபொருட்கள் போதிய அளவில் இருப்பு வைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
பின்னர் அமைச்சர் ஐ.பெரியசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

புதிய உறுப்பினர்களுக்கு கடன்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, அனைத்து துறை அதிகாரிகளும் முடுக்கிவிடப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர்க்கடன் வழங்கிடவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்ளில் புதிய உறுப்பினர் சேர்க்கையை நடத்தி, அவர்களுக்கும் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கொரோனா நிவாரண நிதி முதல் தவணையாக தலா ரூ.2 ஆயிரம் வீதம் 99 சதவீதம் பேருக்கு வழங்கப்படுள்ளது. தற்போது கொரோனா நிவாரண நிதி 2-வது தவணையாக ரூ.2 ஆயிரத்துடன் 14 வகையான மளிகை பொருட்களும் 2 கோடியே 10 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

ரூ.11,500 கோடி கடன்

விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம், இடுபொருட்கள் போன்றவை வழங்க, தேவையான அளவைவிட கூடுதலாக 2 ஆயிரம் டன் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கவேண்டும் என்றும், கருப்பு, பழுப்பு நிற அரிசிகளை வழங்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு கடன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நடப்பு ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ.11 ஆயிரத்து 500 கோடி விவசாய கடன் வழங்க அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.

அரசு நெல் கொள்முதல் நிலையம் தேவையான அளவுக்கு அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வெற்றிலை விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கவும் ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பிரமணியன், நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, எம்.எல்.ஏக்கள் அப்துல் வகாப், சண்முகையா, மார்க்கண்டேயன், ராஜா, சதன் திருமலைக்குமார், ரூபி மனோகரன், பழனி நாடார், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், நெல்லை கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அழகிரி, நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குனர் சுபாஷினி மற்றும் கூட்டுறவு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story