மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: குற்றாலம் அருவிகளில் 4-வது நாளாக வெள்ளப்பெருக்கு


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை:  குற்றாலம் அருவிகளில் 4-வது நாளாக வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 18 Jun 2021 1:25 AM IST (Updated: 18 Jun 2021 1:25 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் 4-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தென்காசி:

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் 4-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

சாரல் மழை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த மே மாத இறுதியில் சீசன் தொடங்கியது. தென்மேற்கு பருவமழை தற்போது குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வருகிறது. வழக்கமாக ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் குற்றாலத்தில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் பெய்யும் சாரல் மழை தற்போது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது.

நேற்று காலையிலும் தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. மதியம் குற்றாலத்தில் பலத்த சாரல் மழை பெய்தது.

அருவிகளில் வெள்ளப்பெருக்கு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் நேற்று 4-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவி முன்புறம் உள்ள பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் சீறிப்பாய்ந்து கொட்டுகிறது.

ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் அதிகமாக விழுகிறது. இதேபோன்று பழைய குற்றாலம் அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பு

தற்போது கொரோனா கட்டுப்பாடு காரணமாக அருவிகளில் குளிக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை.கொரோனா நோய்த்தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் தென்காசி மாவட்டமும் ஒன்று. 

எனவே, அரசு விதிமுறைகளின்படி குற்றாலம் அருவியில் பொதுமக்கள் குளிக்க அனுமதிக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

Next Story