பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்


பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்
x
தினத்தந்தி 18 Jun 2021 2:14 AM IST (Updated: 18 Jun 2021 2:14 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பெரம்பலூர்:

மாணவர் சேர்க்கை தீவிரம்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கினால் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்படாததால் ஆண்டு தேர்வினை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. இதேபோல் 10, 11, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும் ஆண்டு பொதுத்தேர்வினை தமிழக அரசு ரத்து செய்தது.
இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பள்ளிகளில் ஜூன் 14-ந்தேதி முதல் நடத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பஸ்கள் ஓடினால்...
6, 9-ம் வகுப்புகளில் சேருவதற்கு மாணவ-மாணவிகள் முன்னதாக தாங்கள் படித்த பள்ளிகளில் இருந்து மாற்று சான்றிதழை பெற்று கொண்டு, புதிதாக சேரவுள்ள பள்ளிகளுக்கு பெற்றோருடன் வந்து சேர்ந்து வருகின்றனர். 10-ம் வகுப்பு முடித்த மாணவ-மாணவிகள், வேறோரு பள்ளியில் 11-ம் வகுப்பு சேருவதற்கு 9-ம் மதிப்பெண் விவரம், மாற்று சான்றிதழ் மற்றும் அரசு ஆவணங்களுடன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சேர்ந்து வருகின்றனர். மதிப்பெண் அடிப்படையில் மாணவ-மாணவிகளுக்கு 11-ம் வகுப்புக்கு பாடப்பிரிவுகள் ஒதுக்கப்படுகிறது.
நேற்று மட்டும் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 6- ம் வகுப்பில் 267 மாணவ-மாணவிகளும், 9-ம் வகுப்பில் 31 பேரும், 11-ம் வகுப்பில் 904 பேரும் சேர்ந்துள்ளனர். பஸ்கள் ஓடினால், பள்ளிகள் திறப்பு குறித்து அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டால் பள்ளிகளில் இன்னும் மாணவர் சேர்க்கை உயரும் என்று கல்வியாளர்கள் தெரிவித்தனர். அரசு பள்ளிகளில் உள்ள சலுகைகள் குறித்து ஆசிரியர்கள் பெற்றோர்களிடம் எடுத்துரைத்தால், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை உயரும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Next Story