மேச்சேரி அருகே ஆடுகளை நாய் கடித்ததால் தகராறு: இரும்பு கம்பியால் அடித்து விவசாயி படுகொலை- பெண் உள்பட 2 பேர் கைது


மேச்சேரி அருகே ஆடுகளை நாய் கடித்ததால் தகராறு: இரும்பு கம்பியால் அடித்து விவசாயி படுகொலை- பெண் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 18 Jun 2021 3:49 AM IST (Updated: 18 Jun 2021 3:49 AM IST)
t-max-icont-min-icon

மேச்சேரி அருகே ஆடுகளை நாய் கடித்ததால் ஏற்பட்ட தகராறில் இரும்பு கம்பியால் அடித்து விவசாயி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேச்சேரி:
மேச்சேரி அருகே ஆடுகளை நாய் கடித்ததால் ஏற்பட்ட தகராறில் இரும்பு கம்பியால் அடித்து விவசாயி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
விவசாயி
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள அரங்கனூர் ஊராட்சி கல்கோட்டை பழையூர் பகுதியை சேர்ந்தவர் பொம்மநாயக்கர் (வயது 65). விவசாயி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அவரது அண்ணன் தம்ம நாயக்கருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பொம்மநாயக்கரின் ஆடுகளை தம்மநாயக்கரின் நாய் கடித்தது. இதில் 2 ஆடுகள் இறந்து விட்டன. இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அடித்துக்கொலை
நேற்றுமுன்தினம் மாலை மற்றொரு ஆட்டை தம்மநாயக்கரின் நாய் கடிக்க வந்தது. இதைப்பார்த்த பொம்மநாயக்கர் நாயை பிடித்து கட்டி போடுங்கள் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. 
இதனால் ஆத்திரம் அடைந்த தம்மநாயக்கரின் மகன்கள் குமார் (42), சக்திவேல் (37) ஆகியோர் சேர்ந்து பொம்மநாயக்கரை இரும்பு கம்பியால் தாக்கினார்கள். மேலும் இந்த தாக்குதலுக்கு தம்மநாயக்கரின் மனைவி ரமணி (59) உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த பொம்மநாயக்கரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த  டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
2 பேர் கைது
இது குறித்த புகாரின் பேரில் மேச்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் பொம்மநாயக்கரை அடித்து கொன்றதாக சக்திவேல், குமார் மற்றும் ரமணி ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து சக்திவேல், ரமணி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள குமாரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story