எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதியுடன் 250 படுக்கைகள்: இயக்குனர் தகவல்
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில், விரைவில் 3-ம் அலை ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. அதில் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படக்கூடும் என கூறப்படுவதால் அதற்கான ஆயத்த பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் குழந்தைகள் நல வார்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கு குழந்தைகள் சிகிச்சைப்பிரிவில் பணியாற்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நலஆஸ்பத்திரியில் கூடுதல் வார்டு அமைக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஆஸ்பத்திரியின் இயக்குனர் டாக்டர் எழிலரசி கூறியதாவது:-
எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் 837 படுக்கைகள் உள்ளன. கொரோனா காலத்தில் 500-க்கும் மேற்பட்ட படுக்கைகள் அதற்கான சிகிச்சைக்காக மாற்றப்பட்டன. தற்போது 3-வது அலையை கருத்தில் கொண்டு 250 படுக்கைகள் கொண்ட புதிய வார்டு அமைக்கப்பட்டு வருகிறது. ஏறத்தாழ அனைத்து படுக்கைகளிலும் ஆக்சிஜன் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு கொரோனா சிகிச்சையளிக்க தேவையான மருந்துகள், கட்டமைப்பு வசதிகள் அனைத்துமே தயார் நிலையில் உள்ளன. ஏற்கனவே ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இங்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story