முல்லைப்பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு லோயர்கேம்ப் மின்நிலையத்தில் மின்சார உற்பத்தி அதிகரிப்பு


முல்லைப்பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு  லோயர்கேம்ப் மின்நிலையத்தில் மின்சார உற்பத்தி அதிகரிப்பு
x
தினத்தந்தி 18 Jun 2021 4:32 PM IST (Updated: 18 Jun 2021 4:32 PM IST)
t-max-icont-min-icon

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்படுவதால் லோயர்கேம்ப் மின் நிலையத்தில் மின்சார உற்பத்தி அதிகரித்து உள்ளது.


கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர்கேம்ப்பில் மின்சார உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மின்உற்பத்திக்காக இங்கு 4 ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு ஜெனரேட்டருக்கு வினாடிக்கு 450 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும். அப்போது ஒரு ஜெனரேட்டர் மூலம் 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
முல்லைப்பெரியாறு அணையில் நேற்று முன்தினம் வரை வினாடிக்கு 1,400 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்மூலம் லோயர்கேம்ப் மின்சார உற்பத்தி நிலையத்தில் 3 ஜெனரேட்டர்கள் மூலம் 126 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
இந்தநிலையில் முல்லைப்பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் ‘கிடுகிடு’வென உயர்ந்து வருகிறது. 
மின்சாரம் உற்பத்தி
இதன் எதிரொலியாக நேற்று காலை முதல் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 1,867 கனஅடி வீதம் தண்ணீர் கூடுதலாக திறந்து விடப்பட்டது. இவ்வாறு  திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று முதல் 4 ஜெனரேட்டர்களும் இயங்க தொடங்கின. இதனால் 4 ஜெனரேட்டர்கள் மூலம் மின்சார உற்பத்தி மொத்தம் 168 மெகாவாட்டாக அதிகரித்து உள்ளது.
152 அடி உயரமுள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று 134.10 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரத்து 488 கனஅடியாகவும் இருந்தது. அணையில் 5 ஆயிரத்து 656 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,867 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதில் கம்பம் பள்ளத்தாக்கு பாசனத்துக்காக 200 கனஅடியும், தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காக 100 கனஅடியும் பயன்படுத்தப்படுகிறது. 1,567 கனஅடி நீர் வைகை அணைக்கு செல்கிறது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று முல்லைப்பெரியாறில் 28.4 மில்லிமீட்டர் மழையும், தேக்கடியில் 19.4 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



Next Story