நாகை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்


நாகை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்
x
தினத்தந்தி 18 Jun 2021 4:56 PM IST (Updated: 18 Jun 2021 4:56 PM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்தார்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட கலெக்டராக இருந்த பிரவீன் நாயர் ஊரக வளர்ச்சி் துறையின் இயக்குனராக மாற்றப்பட்டார். இதையடுத்து நாகை மாவட்ட கலெக்டராக அருண் தம்புராஜ் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதை தொடர்ந்து 3 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையை வழங்கினார்.

பின்னர் கலெக்டர் அருண் தம்புராஜ், நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் அறிவுரையின் படி அரசு அறிவிக்கும் அனைத்து நலத்திட்டங்களும் அடித்தட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். நாகை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும். வேளாண்மை மற்றும் மீனவர் நலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தில் அளிக்கப்படும் மனுக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். சமூக இடைவெளியை பின்பற்றுதல், முககவசம் அணிதல், சோப்பு மற்றும் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தின் சமூக வலைதளங்களான DistrictCollector Nagapattinam என்ற முகநூல் மூலமாகவும், Collector- NGT என்ற டுவிட்டர் மூலமாகவும் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள அருண் தம்புராஜ் இதற்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story